Home நாடு ஷாஹிடான் காசிமுக்கு எதிராகக் கைது ஆணை

ஷாஹிடான் காசிமுக்கு எதிராகக் கைது ஆணை

1320
0
SHARE
Ad

கங்கார் (பெர்லிஸ்) – தேசிய முன்னணி அரசாங்கத்தில் அம்னோ சார்பில் பதவி வகித்த டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிமுக்கு எதிராக இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் இன்று கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்மீது புகார் கூறப்பட்டு, விசாரிக்கப்பட்டு வந்த பாலியல் தொந்தரவு தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க ஷாஹிடான் அழைக்கப்பட்டதாகவும், அவர் நீதிமன்றத்திற்கு வராத காரணத்தால் அவர்மீது கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்று நீதிமன்றத்தில் ஷாஹிடானுக்கு எதிராகக் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டபோது, அவரது சார்பில் வழக்காடிய அவரது வழக்கறிஞர் ஷாஹிடான் வெளிநாட்டில் இருப்பதாகவும், இந்த வழக்கு குறித்துத் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார்.

#TamilSchoolmychoice

ஷாஹிடானின் முகநூல் தகவல்களின்படி அவர் தற்போது மெக்காவில் உம்ரா புனித யாத்திரையில் இருக்கிறார்.

ஷாஹிடான் வழக்கின் பின்புலம்

ஷாஹிடான் காசிம் 15-வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்தார் என எழுந்த புகார்களைத் தொடர்ந்து ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினரான் அவர் தாமே முன்வந்து இந்த பாலியல் புகார்கள் குறித்து சில விளக்கங்கள் அளித்திருந்தார்.

“இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட விவகாரம். அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டபோது, நன்கொடைகளுக்காக பாட்டுப் பாடி மகிழ்விக்கும் குழுவினருக்கு நான் நன்கொடை அளிக்க முற்பட்டேன். அந்தக் குழுவின் நிர்வாகியும் என்னைப் பார்க்க விரும்பினார். நான் நன்கொடை தந்து விட்டுப் புறப்பட்டு விட்டேன். அந்தக் குழுவினரை எனது குடும்ப உறுப்பினர்களாகவே நான் பார்க்கிறேன். தவறான கண்ணோட்டத்தில் நான் நடந்து கொள்ளவில்லை” என ஷாஹிடான், தனது வழக்கறிஞர் துணையோடு தயாரிக்கப்பட்ட பதிலை அண்மையில் பத்திரிக்கையாளர்களிடத்தில் வாசித்தார்.

எனினும் குறிப்பிட்ட சம்பவம் நடந்த (அக்டோபர் 21)  மறுநாள் 15-வயதுடைய அந்தப் பெண் காவல் துறையில் புகார் ஒன்றைச் செய்திருந்தார். ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்தப் புகாரை அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் திரும்ப மீட்டுக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, அந்தப் புகார் மீட்டுக் கொள்ளப்பட்டாலும், நாங்கள் தொடர்ந்து அந்தப் புகாரை விசாரிக்க முடியும் என காவல்துறை அறிவித்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 30) புகார் கொடுத்த அந்தப் பெண் புக்கிட் அமானிலுள்ள காவல்துறை தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்டு சில மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்துதான் ஷாஹிடான் காசிம் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் தன்னிலை விளக்கம் அளித்தார். அந்தப் பெண்ணுடன் தனியாக காரில் இருந்தது குறித்தும், அப்போது அவரது கார் ஓட்டுநர் இருந்தாரா என்பது குறித்தும் பத்திரிக்கையாளர் கேள்விகளைத் தொடுத்தபோது, “காவல் துறையில் நான் புகார் செய்திருக்கிறேன். அவர்கள் விசாரித்து வருவதால் மேற்கொண்டு எதையும் கூறுவதற்கில்லை” என ஷாஹிடான் மழுப்பினார்.