Home நாடு வல்லினம் விழா: “மலேசியாவில் பெண்ணியம் சார்ந்த தமிழ் சினிமாவை நான் பார்த்ததில்லை” – இரா.சரவண தீர்த்தா

வல்லினம் விழா: “மலேசியாவில் பெண்ணியம் சார்ந்த தமிழ் சினிமாவை நான் பார்த்ததில்லை” – இரா.சரவண தீர்த்தா

1740
0
SHARE
Ad
வல்லினம் விழாவில் வெளியிடப்படும் ‘ஊதா நிற தேவதைகள்’ என்ற சினிமாக் கட்டுரைகள் அடங்கிய நூலை எழுதிய சரவண தீர்த்தா

(மலேசியாவில் தீவிரமாக இலக்கியத் தளத்தில் இயங்கி வரும் வல்லினம் குழுமத்தின் கலை இலக்கிய விழா 10 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 18-ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, 10 நூல்கள் வெளியீடு காண்கின்றன. அவற்றில் ஒன்று இரா.சரவணதீர்த்தா எழுதியிருக்கும் “ஊதா நிற தேவதைகள்” என்ற கட்டுரைத் தொகுப்பு. உலக சினிமா குறித்துத் தொடர்ந்து எழுதி வருபவர்  இரா.சரவணதீர்த்தா. பெண்ணியத்தை மையப்படுத்தி இயக்கப்பட்ட திரைப்படங்களில் உள்ள உள்ளார்ந்த குரலை அவரது கட்டுரைகள் பதிவு செய்கின்றன. திரைப்படத்தின் தொழில் நுட்பத்தையோ அதன் கதையையோ விவாதிக்காமல் இயக்குநர் பொதித்து வைத்துள்ள அதன் ஆன்மாவை தொட முயல்பவை இவரது சினிமா கட்டுரைகள். வல்லினம் சார்பில் திரு கங்காதுரை, நூலாசிரியர் இரா.சரவணதீர்த்தாவுடன் நடத்திய நேர்காணல் செல்லியலில் பதிவேற்றம் காண்கிறது)

கேள்வி: ‘ஊதா நிற தேவதைகள்’ உங்களின் முதல் நூல். ஒரு பத்திரிகையாளரான சரவணதீர்த்தாவுக்குள் ஒரு கட்டுரையாளர் இருப்பதை எப்போது உணர்ந்தீர்கள்?

இரா.சரவணதீர்த்தா: நான் பத்திரிகையாளனாக இருக்கும் போது நாளிதழ்களில் சமூகம், அரசியல் தொட்டு கட்டுரைகளை எழுதி வந்துள்ளேன். அக்கட்டுரைகள் யாவும் நான் செய்து கொண்டிருந்த பத்திரிகைத் தொழிலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவைகள். அது ஒரு பத்திரிகையாளனிடமிருந்து வந்த தொழில் சார்ந்த எழுத்துக்களாகத்தான் இருந்தன என்பதை வல்லினத்துக்கு நான் அறிமுகமான பிறகு உணர்ந்தேன். எனக்குள் ஒரு கட்டுரையாளன் வாழ்கிறான் என்பதை நவீன் எனக்குக் காட்டினார். பத்திரிகை வாழ்க்கையில் பத்திரிகையாளன் எதிர்கொள்ளும் பணியிட அரசியலையும் அனுபவங்களையும் கட்டுரையாக வல்லின இணையதள இதழில் எழுதி வந்தேன். தொடர்ந்து வல்லினம் ஏற்பாடு செய்த இல்லகியப் பட்டறைகள், கலந்துரையாடல்கள் போன்ற இலக்கிய நடவடிக்கைகள் நவீன இலக்கியம் தொடர்பான புரிதலை ஆழப்படுத்தியது. அனைத்து சினிமாவையும் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு உலக சினிமாவை அறிமுகப்படுத்தியது வல்லினம்தான். வல்லினம் நடத்தி வந்த பறை எனும் ஆய்விதழில் உலக இலக்கியம் தலைப்பில் கட்டுரைகளைப் பிரசுரிக்க வல்லினம் குழு எண்ணிய வேளையில் சினிமாவைப் பார்க்கும் பழக்கம் கொண்ட என்னிடமிருந்து கட்டுரையைக் கேட்டார் நவீன். பெரும்பான்மையாக வணிக சினிமாவையும் பழைய தமிழ்ப் படங்களையும், இயக்குனர் சங்கர் போன்றவர்கள் இயக்கும் பிரமாண்டங்கள் நிறைந்த படங்களைப் பார்த்து ரசித்து வந்த எனக்கு இது ஒரு புது அனுபவம்தான். வல்லினக் குழுவினர் சில உலக சினிமா படங்களை அறிமுகம் செய்தனர். இப்படங்களின் குறுந்தட்டைத் தேடி அலைந்தபோது எனக்கு ஒரு படம் கைவசம் கிடைத்தது. பெண் இயக்குனர் தீபா மேத்தா இயக்கிய வாட்டர் எனும் திரைப்படம் அது. இந்து சாஸ்திரம் என்ற பெயரில் விதவைப் பெண்களை மிருகங்களாக நடத்தும் வாட்டர் படம் என்னைத் தொந்தரவு செய்தது. இப்படத்தின் கதையைக் குறித்து நவீனிடம் அறச்சீற்றத்தோடு பேசினேன். “பேச வேண்டாம் எழுதுங்கள்” என்றார் நவீன். எழுதிய கட்டுரையைப் பார்த்து எனக்குள் ஒரு கட்டுரையாளன் இருக்கிறான் என்பதை நவீன் கண்டார். இங்கிருந்து என் உலக சினிமா கட்டுரை தொடங்கியது. வல்லினத்தோடு தொடர்ந்து பயனித்த அனுபவங்களும் அங்கிருந்து நான் பெற்றுக் கொண்ட நவீன இலக்கியத்தின் புரிதலும் என் எழுத்தை ஒரு செய்தி தளத்திலேயே நிறுத்திவிடாமல் நூல் வடிவம் பெரும் தகுதியுடைய கட்டுரையாக உருமாறியிருக்கிறது. இந்த உருமாற்றத்தின் முயற்சியில் உருவான ‘ஊதா நிற தேவதைகள்’ எனும் பத்து உலக சினிமா கட்டுரைகள் என்னை நவீன இலக்கிய கட்டுரையாளனாக எழுதுலகில் அறிமுகப்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

கேள்வி: ஒப்பீட்டளவில் உங்களுடைய சினிமா விமர்சனக் கட்டுரைகள் பிற சினிமா கட்டுரை தொகுப்புகளிலிருந்து எந்த அடிப்படையில் மாறுபடுகின்றன.

இரா.சரவணதீர்த்தா: திரைப்படத்துறை சார்ந்த நூல் முயற்சிகளைப் பலர் செய்துள்ளனர். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் செழியனின் உலக சினிமா கட்டுரை தொகுப்பு புத்தகங்களைச் சொல்லலாம். இதில் இவர் உலக சினிமா குறித்த கதைகளையும், அதன் தொழில்நுட்பத்தையும் குறித்துப் பேசியிருப்பார். கூடுதல் தகவலாக இயக்குனர்களின் சுயவிவரங்களையும், அவர்கள் இயக்கிய வேறு படங்களையும், அவர்களுக்குக் கிடைத்த விருதுகள் குறித்தும் சொல்லியிருப்பார். இ.பா.சிந்தனின் அரசியல் பேசும் அயல் சினிமா எனும் நூலில் மையத்திரைப்படங்கள் பேசுகிற அரசியலையும், அதை சார்ந்த நிகழ்வுகளை மட்டுமே முன்னிறுத்தி இருப்பதைக் காணலாம். ‘ஊதா நிற தேவதைகள்’ கட்டுரை தொகுப்பில் பெண்ணியம் சார்ந்த படங்கள் மட்டுமே மையக்கருவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு நிலங்களில், வெவ்வேறு கலாச்சாரம், பண்பாடு மற்றும் சமய நம்பிக்கைகளைக் கொண்ட சமூகம், பெண்கள் மேல் கொண்டிருக்கும் பார்வையை, அரசியலை, பெண்ணியத்தை, அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைக்கதை குறித்த உரையாடல் எனலாம். காட்சிகளின் மூலம், இயக்குநர் அப்படத்தில் சொல்ல வரும் அரசியலை எப்படிக் காட்சிப்படுத்தி பார்வையாளனுக்குச் சொல்கிறார் என்பதனை இக்கட்டுரைகள் வாசகனுக்கு மொழிகின்றன. வெவ்வேறு நிலம் சார்ந்த திரைப்படங்களில் காட்டப்படும் சம்பவங்களின் வரலாற்றுப் பின்னணிகளையும், சமகாலச் சூழலையும் இக்கட்டுரைகளின் வழி தந்துள்ளேன். இதன் மூலம் படத்தின் திரைக்கதைகளில் பயணிக்கும் பார்வையாளனுக்கு அத்திரைக்கதையை முழுமையாகச் சுவீகரிக்க முடியும். இந்த அணுகுமுறைகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணிய மையக்கருவும் ஊதா நிற தேவதைகளைப் பிற படைப்புகளிலிருந்து தனித்தன்மையோடு நிற்பதாக நான் கருதுகிறேன்.

கேள்வி: ஒரு பத்திரிகையாளராக நீங்கள் பதிவு செய்ய முடியாத விடயங்கள் உங்கள் கட்டுரைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீங்கள் உணர்கிறீர்களா? எவ்வாறு?

இரா.சரவணதீர்த்தா: நிச்சயமாக! இந்தப் பத்து கட்டுரைகளும் வெவ்வேறு நிலம் சார்ந்த, நம்பிக்கையைச் சார்ந்த மனிதர்களின் வாழ்வியலைப் பற்றி பேசுகின்றன. சாஸ்திரங்கள் பெயரில், மரபுவழி நம்பிக்கை பெயரில் பெண் எந்த அளவுக்கு கொடுமைப்படுத்தப்படுகிறாள் என்று திரைக்கதை மூலம் இயக்குநர் காட்டியிருக்கும் அரசியலையும் சிக்கலையும் இக்கட்டுரையில் காட்டியுள்ளேன். மனு சாஸ்திரத்தில் பெண்களுக்கு இழிவான இடமே ஒதுக்கப்பட்டுள்ளதை படக்காட்சிகள் வரும் கதாப்பாத்திரங்கள் எழுப்பும் கேள்விகளின் வாயிலாக கட்டுரைகளில் காட்சி மொழிப்படுத்தியுள்ளேன். கௌரவக் கொலைகளின் கொடுமைகள் ஏன் நடக்கின்றன? கொலைக்கும் சமயத்திற்கும் தொடர்பில்லை என்ற வாதத்தை முன் வைக்கும் கதாப்பாத்திரங்களின் உரையாடல்களை என் கட்டுரைகள் பதிவு செய்து வாசகனுக்குள் கேள்வியை எழுப்ப வைக்கிறது. அவனுக்குள் கலகத்தை ஏற்படுத்துகிறது. அவனுக்குள் ஏற்படும் தொந்தரவினை அவன் மறு ஆய்வு செய்வதற்கான சுதந்திரத்தை, வெளியை இக்கட்டுரை கொடுக்கிறது. பத்திரிகையில் இதுபோன்ற தகவல்கள் ஆசிரியரால் கத்தரிக்கப்படும். மேலும் பத்திரிகை என்பது செய்திகளைப் பதிவு செய்யும் தாள் மட்டுமே. அங்கே விரிவான விவாததிற்கு இடம் கிடையாது. பத்திரிகை வணிக நோக்கம் கருதி செயல்படுவதால் பலரின் மனதை அது பாதுகாக்க வேண்டியுள்ளதால் செய்திகளில் சமரசங்கள் இருக்கும் வாய்ப்புகள் உண்டு.

கேள்வி: ‘ஊதா நிற தேவதைகள்’ முழுக்க முழுக்க பெண்ணியம் சார்ந்த சினிமாவைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?

இரா.சரவணதீர்த்தா: என் உடன் பிறந்த சகோதரிகள் ஏழு பேர். ஒரு ஆணிடம் பேசியதற்காக என் முரட்டு அண்ணன் என் அக்காவைக் காலணியால் அடித்ததைப் பார்த்திருக்கிறேன். அந்தக் காலணியின் முன் புறம் இரும்பால் செய்யப்பட்டது. அடிவாங்கிய அக்காவின் இடது கண் நூறு குளவிகள் ஒரே இடத்தில் கொட்டினால் எப்படி இருக்குமோ அது மாதிரி வீங்கியிருந்தது. என் தந்தை சொல்வதை எதிர்த்துக் கேட்ட என் தாய் வாயில் ரத்தம் வரும் வரை அடிவாங்கினாள். இவை யாவும் நான் பத்து வயதில் கண்ட குடும்ப வன்முறைகள். அப்போது இதனை குடும்பச் சண்டை என்றுதான் சொல்லுவார்கள். ஒருவனை கோபத்தில் திட்ட வேண்டுமென்றால் அவனை அவனுடைய தாயின் குறியைச் சொல்லி தோட்டத்தில் நடக்கும் சண்டையில் பேசும் கெட்டவார்த்தைகள் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது.
திருமணமான பிறகு என் மனைவியுடன் நான் நடந்து கொள்ளும் முறைகள் என்னை எஜமானனாகவும் அவளை வேலைக்காரியாகவும் நடத்துவதாக உணர வைத்தது. எனக்குப் பிள்ளைகள் பிறந்து அவர்களும் விவரம் தெரியும் அளவுக்கு வளர்ந்த பின் பெண்கள் சம உரிமை குறித்து அவர்கள் என்னிடம் எழுப்பிய கேள்விகள் பெண்ணியம் குறித்து யோசிக்க வைத்தது. “வயதுக்கு வந்த மகள் தந்தையுடன் நெருக்கமாகவும், அதுபோல் தாய் மகனுடன் நெருக்கமாகவும் பழகக் கூடாது என இன்று குரு ஒருவர் பிரசங்கம் செய்தார். பெண்கள் என்ன அவ்வளவு கேவலமானவர்களா? மாதவிடாய் வந்த பெண்களைக் கடவுள் சேர்த்துக் கொள்ளமாட்டாரா?” இதுபோன்ற கேள்விகளை என் மகள் முன்வைத்தாள். நம் சமூகப் பெண்களுக்கு மட்டும்தான் இந்தப் பேதமையா என்று அலசத் தொடங்கினேன். பாரதியின் புதுமைப்பெண் எழுச்சியின் கவிதைகளும், சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பதை பூமி பார்க்க வேண்டும் போன்ற பாடல் வரிகளும் பெண்ணியத்திற்காக பேசும் சிந்தனை மாற்றத்தைத் தந்தது. பெண்ணியத்தை அடிப்படையாகக் கொண்டு சினிமா கட்டுரைகளைப் படையுங்கள் என நவீன் எனக்குக் கொடுத்த ஊக்கம் பெண்ணியம் குறித்த என் சிந்தனை மாற்றத்துக்கான ஒரு களமாக இக்கட்டுரை அமைந்தது.. உலகம் முழுவது உள்ள பெண்கள் வெவ்வேறு சமய, பண்பாட்டு வழி வேறு பட்டிருந்தாலும் தந்தை வழி சமூகத்தில் அவர்களுக்கு ஏற்படும் அநீதிகளும் அடக்குமுறைகளும் ஒரே வலியாகத்தான் இருக்கிறது என்பதை இப்படங்கள் மூலம் உணர முடியும்.

கேள்வி: மலேசிய இலக்கியச் சுழலில் ‘ஊதா நிற தேவதைகள்’ நூல் எப்படிப்பட்ட பங்களிப்பை அல்லது தாக்கத்தை ஏற்படுத்துமென நினைக்கிறீர்கள்?

இரா.சரவணதீர்த்தா: ஊதா நிற தேவதைகளில் பேசப்படும் சினிமாக்களின் கதைகள் பெரும்பாலும் உண்மைச் சம்பவங்கள் அல்லது இயக்குனர்களின் சொந்த வாழ்க்கையில் நேரடியாகப் பாதித்த சம்பவங்களின் காட்சி மொழிகள். நான் முன்பு சொன்னதைப் போல பெண் என்பவள் எந்த மண்ணைச் சேர்ந்தவளாக இருந்தாலும் அவள் அனைவராலும் குறைத்துதான் அளவுகோலிடப்படுகிறாள். பெண் ஆணுக்கு ஒரு படி கீழ்தான் என்று மரபுவழி கூறி வரும் பழமைவாதப் பெண்கள், பெண்களின் சமநிலை கோரிக்கையை நிராகரிக்கிறார்கள். பெண்ணியம் குறித்த புரிதல் மலேசியர்கள் மத்தியில் அவ்வளவு வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், ஆங்காங்கே பெண்களுக்கான சம உரிமைக் குரல்கள் கேட்ட வண்ணமாகத்தான் இருக்கிறது. இஸ்லாம் சகோதரிகள் இயக்கத்திலிருந்து பெண்களுக்கான சம உரிமைகள் சமய கட்டமைப்புக்கு உட்பட்டு குரல் எழுப்பப்படுகிறது. பெண்களைத் தீட்டு என்று ஒதுக்கி வைக்கும் மதம் சார்ந்த சடங்குகளை எதிர்த்து ஆண்களும் அவர்களுக்காக பேச முன்வந்துள்ளனர். இச்சூழலில் வேற்று நிலத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறையையும் அநீதிகளையும் காட்டும் சினிமாக்களை உள்ளடக்கிய ஊதா நிற தேவதைகள் நூல் மலேசியச் சூழலில் தாக்கத்தைக் கொண்டு வருமா என்ற கேள்விக்கு எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனாலும் பெண்ணியத்திற்காக குரல் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் ஊதா நிற தேவதைகள் அவர்களின் போராட்டங்களுக்குப் புதிய நம்பிக்கையைத் தரும் என்று நம்புகிறேன்.

கேள்வி: உங்களுடைய பார்வையில் மலேசியச் சூழலில் பெண்ணியம் சார்ந்த தமிழ் சினிமாவின் வளர்ச்சி அல்லது அதன் போக்கு எப்படி இருக்கிறது?

இரா.சரவணதீர்த்தா: மலேசியாவில் பெண்ணியம் சார்ந்த தமிழ் சினிமாவை நான் பார்த்ததில்லை. இங்கே எடுக்கப்படும் தமிழ் சினிமாவிலும் சரி, தமிழ் நாடகத்திலும் சரி பருமனான பெண்னை நடிக்க வைத்து அவளின் உடலமைப்பை நையாண்டி செய்துவதுதான் அவர்கள் காட்டும் பெண்ணியம். மலாய் இயக்குனரான யஸ்மின் அஹ்மாட் படங்களில் இஸ்லாம் சமூகம் தொடர்பான பெண்ணியக் குரல் ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. அனைத்துலகப் பார்வையைக் கவர்ந்த அவருடைய சர்ச்சைக்குரிய படமான முவாலாப் படத்தைச் சொல்லலாம். இதற்கான முயற்சியில் மாற்று சிந்தனை கொண்ட படைப்பாளர்கள் இறங்க வேண்டும்.

கேள்வி: நீங்கள் தேர்ந்தெடுத்த சினிமாக்கள் வெவ்வேறு நிலப்பரப்பைச் சார்ந்ததாக இருந்தாலும் அதன் மையம் பெண்ணியமாக உள்ளது. இம்மாதியான சினிமாக்களை எப்படி கண்டடைந்தீர்கள்?

இரா.சரவணதீர்த்தா: பெண்ணியம் பேசும் சினிமாக்களைத் தேட ஆரம்பித்தேன். என் கட்டுரைகளில் இடம் பெற்றிருக்கும் பத்து சினிமாக்களில் 6 சினிமாக்கள் பெண் இயக்குனரால் எடுக்கப்பட்டவை. பெண்ணியக் கதைகளைத் தேடிக்கொண்டிருந்த போது வல்லினம் குழு ஶ்ரீதர் ரங்கராஜ் சில சினிமாக்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒரு முறை நவீனும் ஶ்ரீதரும் என் வீட்டுக்கு வந்து ‘சர்கிள்’ ஈரானிய படத்தைக் கொடுத்து பார்க்கச் சொன்னார்கள். அவர்களுடன் அமர்ந்து அப்படத்தைப் பார்த்தேன். பிறகு வீடியோ கடைகளிலும் கூகள் தளத்திலும் பெண்ணியம் தொடர்பான படங்களைக் கண்டடைந்தேன். செழியன், இ.பா.சிந்தன் எழுதிய கட்டுரைகளும் எனக்கு படங்களைத் தேட உதவியாக இருந்தன.

கேள்வி: சினிமா என்பது அவரவர் இரசனையைச் சார்ந்தது. அவ்வகையில் உங்களது சினிமா ரசனை எவ்வாறானது?

இரா.சரவணதீர்த்தா: சினிமா என்பது ஒரு சக்திவாய்ந்த ஊடகம். மனிதன் வாழ்வியலை மிக அருகில் காட்டும் ஊடகம் சினிமா. அது பொழுதுபோக்கு அல்ல. ரசிகன் பார்க்கும் சினிமாவும், விமர்சகன் பார்க்கும் சினிமாவும் ஒரே ரசனையைக் கொண்டிருப்பதில்லை.
”நல்ல படம், போய் பாருங்க” என்று நண்பர்கள் காட்டும் பெரும்பாலான படங்கள் எல்லாம் வணிக ரசனை கொண்டதே. கலை அமைதி கொண்ட கலைப் படைப்புகளைப் பார்ப்பதில் என் ரசனையைத் திருப்பியுள்ளேன். எது நல்ல சினிமா என்று வகைப்படுத்துவதற்கும் பயிற்சி தேவை. இயக்குனர் லெனின் பாரதியின் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ தமிழ்ப் படத்தை வெகுவாக இரசித்துப் பார்த்தேன். சத்தங்களும் இரைச்சல்களும், ஹீரோக்களின் பிம்பங்களும் என் ரசனையிலிருந்து விலகி எங்கோ சென்று விட்டதை இப்படத்தை ரசித்துப் பார்த்ததின் மூலம் உணர்கிறேன். சினிமாவைக் குறிப்பாக உலக சினிமாவைப் பார்ப்பதற்கான பயிற்சி நமக்குத் தேவை.

கிலோ கணக்கில் பேசப்படும் வசனங்களும், ரசிகனை மாய உலகத்திற்குக் கொண்டு செல்லும் பிரமாண்டங்களும் கொண்ட படங்கள் நல்ல ரசனையை உருவாக்குவதில்லை. அப்படம் பொழுதை நிரப்பும் ஒரு வணிக விளம்பரம்தான். வணிக சினிமாவைப் பார்த்துப் பழகிய புலன்களுக்கு எதார்த்த சினிமாவின் ரசனையை எட்டிப் பிடிக்க காலமெடுக்கும்.

கேள்வி: இந்த நூலுக்கான கட்டுரைகளை எழுதும்போது இந்தச் சினிமாவின் வழி உருவான சிந்தனை எவ்வகையான மாற்றத்தை ஏற்படுத்தியது?

இரா.சரவணதீர்த்தா: பெண்ணியத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் பத்து படங்களைப் பார்த்த எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது மட்டுமல்ல அப்படத்தில் ஒலிக்கும் பெண்களின் கலகக் குரல் என் மண்டைக்குள் ஏதோ ஒரு மூலையிலிருந்து கேட்டுக்கொண்டே இருந்தது. பத்து வயதில் விதவையான சிறுமியை மேல்தட்டு பிராமணன் வீட்டுக்கு செக்ஸ் சேவைக்காக அழைத்துச் செல்லப்படுகிறாள். வாரணாசியில் விதவைகள் வாழும் ஆசிரமத்தை வழிநடத்தும் மதுமதி என்பவள் இக்காரியத்தைச் செய்கிறாள். சாஸ்திரங்களுக்கு எதிராக நடந்து கொண்டால் தெய்வ குற்றமாகிவிடும் என்று தன் பாதுகாப்பில் இருக்கும் விதவைகளிடம் சதா எச்சரிக்கையை எழுப்பிக் கொண்டிருக்கும் மது, ஆசிரமத்தின் பிழைப்புக்காக அங்குள்ள ஓர் அழகான, இளமையான விதவையை செக்ஸ் சேவைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறாள். விதவைகள் வாழும் போதும் இறக்கும் போதும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று ஆசிரம விதவைகளுக்குப் பாடம் நடத்தும் மதுமதியின் செயல் மதம் நிறுவும் சாஸ்திரத்தின் மேல் ஒரு ஐயத்தைப் படம் பார்ப்பவன் மீது ஏற்படுத்துகிறது. சாஸ்திரத்தின் நேர்மையை விசாரணை செய்யச் சொல்கிறது. நான் சார்ந்திருக்கும் கிருஷ்ண பக்தியில் செய்யப்படும் பிரசங்கங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அதனை கேள்விக்கு உட்படுத்துகிறேன். என் பிள்ளைகளுக்கும் அதனைச் சொல்லிக் கொடுக்கிறேன். எனக்கு “மதம்” பிடிப்பதில்லை.

கேள்வி: இறுதியாக, உங்களுடைய அடுத்த நூலுக்கான திட்டம் என்ன?

இரா.சரவணதீர்த்தா: அடுத்த நூலுக்கான திட்டம் என்று இதுவரையில் எதுவும் இல்லை. அதற்கான வாய்ப்பும் நேரமும் வரும்போது அது அமையலாம். அதுவரையில் இலக்கியம் சார்ந்த விடயங்களில் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருப்போம்.

குறிப்பு:

இரா.சரவணதீர்த்தாவின் நூலை வாங்க 18.11.2018இல் நடைபெறும் வல்லினம் கலை இலக்கிய விழாவில் வாசகர்கள் கலந்துகொள்ளலாம்.

நிகழ்ச்சியின் விபரங்கள்:

நாள்: 18.11.2018 (ஞாயிறு)
இடம்: கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி, கோலாலம்பூர்
நேரம்: மதியம் 2.00 – மாலை 5.30

தொடர்புடைய முந்தைய கட்டுரைகள்:

  • வல்லினம் விழா: “எல்லாத் துறைகளிலும் விமர்சனம் தேவையாகிறது” – அ.பாண்டியன்