கங்கார் – இன்று திங்கட்கிழமை காலை இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சரும் ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாஹிடான் காசிம் வயது குறைந்த பெண் ஒருவரை பாலியல் வன்முறை செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
இன்று காலை 8.20 மணியளவில் தனது மனைவியுடன் நீதிமன்றம் வந்தடைந்த அவரை சுமார் 50 ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் வரவேற்றனர்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சட்டத்தின் கீழ் அவர் குற்றம் சாட்டப்பட்டார். வயது குறைந்த குழந்தை ஒருவரின் உடல் பாகங்களை தொடுவது அல்லது பாலியல் நோக்கத்தோடு வன்முறைக்கு உள்ளாக்குவது போன்ற செயலை செய்ததற்காக அவர் குற்றம் சாட்டப்படிருக்கிறார்.
கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் அவர் இந்தக் குற்றச்சாட்டைப் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
ஷாஹிடான் மீது கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் நேரில் எதிர்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த கைது ஆணை உத்தரவு இரத்து செய்யப்பட்டது.
ஷாஹிடானுக்கு இருநபர் உத்தரவாதத்தின் பேரில் 25 ஆயிரம் ரிங்கிட் பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டது.
அவரது அனைத்துலகக் கடப்பிதழை அவர் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.
வழக்கு ஜனவரி 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.