Home நாடு “பினாங்கு அரசாங்க ஏற்பாட்டில் தமிழ்க் கல்வி மாநாடு” – இராமசாமி அறிவித்தார்.

“பினாங்கு அரசாங்க ஏற்பாட்டில் தமிழ்க் கல்வி மாநாடு” – இராமசாமி அறிவித்தார்.

1200
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – எதிர்வரும் நவம்பர் 26-ஆம் தேதி பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ்க் கல்வி மாநாடு, மலேசியாவில் தமிழ் மொழிப் பள்ளிகளின் எதிர்காலம் குறித்த விவகாரங்களை விவாதிக்கும் களமாக அமையும்.

“மலேசியா பாருவில் தமிழ் கல்வியின் எதிர்காலம்” என்ற தலைப்பில் பிறை நகரில் நடைபெறும் இந்த இரண்டு நாள் மாநாட்டில் சுமார் 300 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்களும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த மாநாட்டை, பினாங்கு மாநிலத்தின் முதலாம் துணை முதல்வர் அகமட் சக்கியுடின் அப்துல் ரஹ்மான் அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைப்பார்.

#TamilSchoolmychoice

பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி இந்த மாநாட்டில் முதன்மை உரையை நிகழ்த்துவார்.

இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மேற்கண்ட விவரங்களை வெளியிட்ட பினாங்கு மாநிலத்தின் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, இந்த மாநாடு தமிழ்க் கல்வி குறித்த 20-க்கும் மேற்பட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கும் எனத் தெரிவித்தார். அரசாங்க நிதி உதவி, நாட்டின் முதலாவது  தமிழ் இடைநிலைப் பள்ளியை உருவாக்குவது மற்றும் பொதுவாக நாட்டிலுள்ள தமிழ்ப் பள்ளிகளின் நலன்கள் ஆகியவை குறித்தும் இந்த மாநாடு விவாதிக்கும்.

நிதி உதவி தொடர்பில் பினாங்கு அரசாங்கம் பின்பற்றும் சிறந்த நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நாடெங்கிலும் உள்ள 524 தமிழ்ப் பள்ளிகளின் நிலைமையை மேம்படுத்துவது குறித்தும் இந்த மாநாடு ஆராயும் என்றும் இராமசாமி மேலும் தெரிவித்தார்.

“மலேசிய அரசியல் சாசனத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று தாய்மொழிக் கல்வியாகும் என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். எனவே, தாங்கள் தேர்ந்தெடுக்கும் மொழியில் கல்வியைக் கற்க, குழந்தைகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” என வலியுறுத்திய இராமசாமி,

“தமிழ்க் கல்வி மாநாட்டில், தமிழ் இடைநிலைப் பள்ளி ஒன்றை அமைப்பது குறித்தும், அந்தப் பள்ளியை சீன இடைநிலைப் பள்ளி பாணியில் அமைப்பதா அல்லது மற்ற மாதிரிகளைப் பின்பற்றுவதா என்பது குறித்தும் விவாதிப்போம்” என்றும் குறிப்பிட்டார்.

விவாதங்களின் முடிவுகளைத் தொகுத்து நாங்கள் கல்வி அமைச்சின் பரிசீலனைக்கு அனுப்பி வைப்போம்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்காணும் செல்பேசி எண்களை அழைத்து மேலும் விளக்கங்கள் பெறலாம்:

016-447 4738 அல்லது

010-563 2279