புத்ரா ஜெயா – இன்று புதன்கிழமை இங்குள்ள ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு வாக்குமூலம் வழங்க நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சோர், அவரது முன்னாள் சிறப்பு உதவியாளர் டத்தோ ரிசால் மன்சோர் மற்றும் முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் ஆகிய மூவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து நாளை வியாழக்கிழமை அம்மூவரும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரவாக் மாநிலத்திலுள்ள பள்ளிகளுக்கு சூரிய சக்தியிலான மின் ஆற்றலை வழங்கும் திட்டம் தொடர்பில் விசாரணை நடத்த ரோஸ்மாவும் அவரது உதவியாளர் ரிசால் மன்சோரும் இன்று காலை 9.30 மணிக்கு புத்ரா ஜெயா ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வருமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் திட்டத்தின் மதிப்பு 2.5 பில்லியன் ரிங்கிட் என்றும் முன்னாள் மலேசிய அரசாங்கத்தின் தலைவர் ஒருவரின் நேரடி உத்தரவின் பேரில் இந்தத் திட்டத்திற்கான குத்தகை வழங்கப்பட்டது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சரவாக் மாநிலத்தில் உள்ள 369 புறநகர் பள்ளிகளில் இந்த சூரிய சக்தி தகடுகளைப் பொருத்தும் திட்டத்தின் குத்தகை பிந்துலுவில் ஒரு வாடகைக் கார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த ஊழல் முறைகேடுகள் விசாரிக்கப்படும் அதே வேளையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வருமாறு தெங்கு அட்னானும் (படம்) பணிக்கப்பட்டுள்ளார்.
கூட்டரசுப் பிரதேச அமைச்சராக இருந்த காலகட்டத்தில் 5.63 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 273 ஹெக்டர் நிலமேம்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட 97 சந்தேகத்திற்குரிய முறைகேடுகள் – பரிமாற்றங்கள் குறித்தும் தெங்கு அட்னான் விசாரிக்கப்படுகிறார்.