புத்ரா ஜெயா – இன்று புதன்கிழமை காலை 11.40 மணியளவில் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் வாக்குமூலம் வழங்க இங்குள்ள ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகம் வந்தடைந்தார்.
இருப்பினும் ஏற்கனவே வெளியான தகவல்களின்படி ரோஸ்மாவின் சிறப்பு உதவியாளர் ரிசால் மன்சோர் வாக்குமூலம் வழங்க இன்று ஊழல் தடுப்பு ஆணையம் வரமாட்டார் என்றும் அவரிடமிருந்து வாக்குமூலம் பெறும் படலம் நடந்து முடிந்துவிட்டதாகவும் ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவித்தன. இருப்பினும் நாளை ரிசால் மன்சோர் நேரடியாக நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, ரிசால் ஊழல் தடுப்பு ஆணையத்தால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருக்கிறார்.
ரோஸ்மாவும் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஊழல் தடுப்பு ஆணையத்திலேயே அவர் ஒரு நாள் தடுப்புக் காவலில் வைக்கப்படுவாரா அல்லது வீட்டுக்கு அனுப்பப்பட்டு, மீண்டும் நாளை நீதிமன்றம் வர அனுமதிக்கப்படுவாரா என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.
இதற்கிடையில் முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் நிலபேர ஊழல்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்க இன்று பிற்பகல் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சரவாக் மாநிலத்தில் உள்ள உட்புறப் பள்ளிகளுக்கு சூரிய சக்தியிலான மின் ஆற்றலை வழங்கும் திட்டம் தொடர்பில் நடந்த ஊழல்கள் காரணமாக ரோஸ்மாவும் ரிசாலும் விசாரிக்கப்படுகின்றனர்.
நிலபேர ஊழல்கள் காரணமாக தெங்கு அட்னான் விசாரிக்கப்படுகிறார்.
கூட்டரசுப் பிரதேச அமைச்சராக இருந்த காலகட்டத்தில் 5.63 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 273 ஹெக்டர் நிலமேம்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட 97 சந்தேகத்திற்குரிய முறைகேடுகள் – பரிமாற்றங்கள் குறித்தும் தெங்கு அட்னான் விசாரிக்கப்படுகிறார்.