Home நாடு ரந்தாவ் சட்டமன்றம்: முகமட் ஹசான் மீண்டும் போட்டியிடுவாரா?

ரந்தாவ் சட்டமன்றம்: முகமட் ஹசான் மீண்டும் போட்டியிடுவாரா?

1081
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ரந்தாவ் சட்டமன்றத்திற்கு இடைத் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற பரபரப்பு அதிகரித்து வரும் வேளையில், இதற்கான தீர்ப்பை நாளை வெள்ளிக்கிழமை சிரம்பான் தேர்தல் நீதிமன்றம் வழங்கவிருக்கிறது.

14-வது பொதுத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின்போது ஹசானை எதிர்த்துப் போட்டியிட்ட டாக்டர் ஸ்ரீராம் வேட்புமனுத் தாக்கல் செய்யத் தடுக்கப்பட்டதன் காரணமாக ரந்தாவ் சட்டமன்றத்திற்கான தேர்தல் இரத்து செய்யப்பட வேண்டும் என ஸ்ரீராம் வழக்கு தொடுத்திருந்தார்.

ரந்தாவ் சட்டமன்றத்தின் தேர்தல் செல்லும் – மறு தேர்தல் கிடையாது – என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தால் பிரச்சனை முடிந்தது.

அம்னோ துணைத் தலைவரும், ரந்தாவ் நடப்பு சட்டமன்ற உறுப்பினருமா முகமட் ஹசான்
#TamilSchoolmychoice

ஆனால், மறு தேர்தல் என நீதிமன்றம் நாளை தீர்ப்பளித்தால், ரந்தாவ் தொகுதியில் ஹசான் மீண்டும் போட்டியிடுவாரா அல்லது ஒதுங்கிக் கொள்வாரா என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி!

போர்ட்டிக்சன் தொகுதியில் இடைத் தேர்தல் நடந்தபோது அம்னோ போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டது போன்று ரந்தாவ் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ளும் நிலைமையும் ஏற்படலாம்.

டாக்டர் ஸ்ரீராம் – ரந்தாவ் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்குமா?

ஹசான் முன் நிற்கும் பிரச்சனை என்னவென்றால், 14-வது பொதுத் தேர்தலின்போது அவர் நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார். எனவே, தனது பழைய சட்டமன்றத் தொகுதியான ரந்தாவ் தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிட்டு வெல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கிருந்தது.

ஆனால், இப்போதோ, ஹசான் அம்னோவின் துணைத் தலைவராக வெற்றி பெற்றுவிட்டார். எனவே, ரந்தாவ் சட்டமன்றத் தொகுதிக்கு மறு தேர்தல் நடந்தால், அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், மீண்டும் மந்திரி பெசாராக அவரால் முடியாது.

அதிலும், ரந்தாவ் தொகுதிக்கு மறுதேர்தல் நடந்தால், அம்னோ துணைத் தலைவரின் தொகுதி என்பதாலும், இன்னொரு தேசிய முன்னணி-அம்னோ தொகுதியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற இலக்கோடும் நம்பிக்கைக் கூட்டணி கடுமையாகப் பாடுபடும் என்பதில் ஐயமில்லை.

இந்த சூழ்நிலையில் ஹசான் மீண்டும் ரந்தாவ் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்து விட்டால் – அதிலும் ஸ்ரீராம் மீண்டும் அங்கே வேட்பாளராக நிறுத்தப்பட்டு அவரிடம் தோல்வியைத் தழுவினால்  – அரசியல் ரீதியாக ஹசானின் செல்வாக்கு அம்னோ கட்சியிலும், மக்கள் மத்தியிலும், நெகிரி செம்பிலான் மாநிலத்திலும், அதலப் பாதாளத்திற்கு வீழ்ச்சியடைந்து  விடும்.

எனவே, ஓர் அரசியல் வியூகமாக, போர்ட்டிக்சன் போன்று, அம்னோ ரந்தாவ் சட்டமன்றத்திலும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

அல்லது அப்படியே போட்டியிட்டாலும், ஹசான் அங்கு போட்டியிடாமல் மற்றொரு வேட்பாளரை நிறுத்தி நம்பிக்கைக் கூட்டணியின் வேட்பாளரை எதிர்கொள்ளும் முடிவை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

-இரா.முத்தரசன்