Home நாடு ரந்தாவ் மறு தேர்தல் – ஸ்ரீராம் சளைக்காமல் நடத்திய போராட்டத்திற்கு வெற்றி

ரந்தாவ் மறு தேர்தல் – ஸ்ரீராம் சளைக்காமல் நடத்திய போராட்டத்திற்கு வெற்றி

1035
0
SHARE
Ad

சிரம்பான் – கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி தொடங்கியது டாக்டர் ஸ்ரீராம் சின்னசாமியின் (படம்) போராட்டம். அன்றுதான் 14-வது பொதுத் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் நடைபெற்ற நாள்.

வேறு எந்த தொகுதியிலும் இல்லாத அளவுக்கு ஒரு வேட்பாளரையே தடுத்து நிறுத்திய அட்டூழியம் ரந்தாவ் சட்டமன்றத்தில் மட்டுமே அரங்கேறியது.

வெளிவந்த புகைப்படங்கள், காணொளிகள் அனைத்தும் தேசிய முன்னணி அல்லது அம்னோ சார்பில் ஸ்ரீராம் அப்பட்டமாகத் தடுத்து நிறுத்தப்பட்டதை உறுதி செய்தன. அம்னோ வேட்பாளர் முகமட் ஹசான் ஆதரவாளர்கள் காவல் துறை மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒத்துழைப்புடன் ஸ்ரீராமை வேட்புமனுத் தாக்கல் செய்வதிலிருந்து வெற்றிகரமாகத் தடுத்துவிட்டனர்.

#TamilSchoolmychoice

முகமட் ஹசானும் போட்டியின்றி ரந்தாவ் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். அடுத்து அவர் மாநில மந்திரி பெசாராக மீண்டும் நியமனம் பெறுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இங்குதான் விதி விளையாடியது!

பொதுத் தேர்தலில் மத்திய அரசாங்கத்தை இழந்த தேசிய முன்னணி நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தையும் இழந்தது.

தனது போராட்டத்தை விடாப்பிடியாகத் தொடர்ந்த ஸ்ரீராம் முகமட் ஹசானின் ரந்தாவ் வெற்றி செல்லாது என வழக்கு தொடர்ந்தார். விசாரணை முடிந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்புதான் இன்று வழங்கப்பட்டது.

ரந்தாவ் சட்டமன்றத் தேர்தலும் அதன் முடிவுகளும் செல்லாது என்றும் இரத்து செய்யப்படுகின்றன என்றும், இதன்வழி முகமட் ஹசான் சட்டமன்ற உறுப்பினர் தகுதியை இழந்திருக்கிறார்.

மறுதேர்தலில் மீண்டும் அவரே நிறுத்தப்படுவார் என அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி உடனடியாக அறிவித்துள்ளார்.

நீதிபதி அசிமா ஒமார் முன்னிலையில் 12 நாட்கள் நடந்த வழக்கின் விசாரணைகளில் மொத்தம் 19 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

டத்தோஸ்ரீ முகமட் ஹசான்

வேட்புமனுவைத் தாக்கல் செய்ய தேர்தல் மையத்தில் நுழைவதற்கு முன்மொழிபவரும், வழிமொழிபவரும் அனுமதிச் சீட்டு பெற்றிருக்க வேண்டியது அவசியம் என எந்தத் தேர்தல் விதிகளும் இல்லை என நீதிபதி அசிமா தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதைக் காரணம் காட்டித்தான் ஸ்ரீராமுக்கும் அவரது வேட்புமனுவை முன்மொழிந்தவர் மற்றும் வழி மொழிந்தவர் ஆகிய இருவருக்கும் வேட்புமனுத் தாக்கல் மையத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.

இதன் காரணமாக, முகமட் ஹசாரின் தேர்தல் வெற்றியை இரத்து செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் தேர்தலை நடத்திய தேர்தல் அதிகாரி அமினோ அகுஸ் பாரபட்சமாக நடந்து கொண்டதாகவும், ஸ்ரீராம் மண்டபத்திற்கு வெளியே இருக்கிறார் என்பது தெரிந்திருந்தும், நடைமுறைகளுக்கு ஏற்ப அவரை உள்ளே அனுமதிக்க மறுத்த தேர்தல் அதிகாரியின் செயல் நேர்மையற்றது, ஒழுக்கமற்றது என்றும் தனது தீர்ப்பில் சாடிய நீதிபதி தனது செயல்கள் மூலம் தேர்தல் அதிகாரி ஸ்ரீராமின் ஜனநாயக உரிமைகளையும், அரசியல் சாசனத்தின் கீழ் அவருக்கிருந்த மனித உரிமைகளையும் மறுத்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.

வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த ஸ்ரீராம் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி தடுத்து நிறுத்தப்பட்டபோது…

வேட்புமனுத் தாக்கலுக்கு முதல் நாளே ஸ்ரீராம் தனது வேட்புமனுப் பாரத்தைப் பெற்றிருப்பதையும், வைப்புத் தொகையை செலுத்தியிருப்பதையும் சுட்டிக் காட்டிய நீதிபதி, அதன் காரணமாக இன்னொரு வேட்பாளரும் போட்டியில் இருக்கிறார் என்பதை தேர்தல் அதிகாரி நன்கு அறிந்திருந்ததாகவும் தீர்ப்பில் கூறியிருக்கிறார்.

தேர்தல் அதிகாரி 30 ஆயிரம் ரிங்கிட் நஷ்ட ஈடு செலுத்த வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

தீர்ப்பைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களின் கரவொலிகளுக்கிடையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஸ்ரீராம், தீர்ப்பு குறித்து தான் மகிழ்ச்சியடைந்திருப்பதாகவும், இனி ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர்களுக்கு ஜனநாயக முறைப்படி தங்களின் சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றும் கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் தான் பணியாற்றி வந்திருப்பதாகக் கூறுகிறார் ஸ்ரீராம்.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் மறுதேர்தலில் ஸ்ரீராமுக்கு மீண்டும் பிகேஆர் கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பது இதுவரையில் தெரியவில்லை.

எனினும், நம்பிக்கைக் கூட்டணியின் ரந்தாவ் சட்டமன்றத்திற்கான ஒருங்கிணைப்பாளராக ஸ்ரீராம் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமக்கு 14 நாட்கள் கால அவகாசம் இருப்பதாகவும் அதற்குள்ளாக தனது வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிக்கவிருப்பதாகவும் முகமட் ஹசான் தெரிவித்திருக்கிறார்.

மேல்முறையீட்டுக்கான 14 நாட்கள் கால அவகாசம் முடிவடைந்த பின்னரே ரந்தாவ் மறுதேர்தலுக்கான தேர்தல் தேதி நிர்ணயிக்கப்படும் என தேர்தல் ஆணையத் தலைவர் அசார் ஹருண் அறிவித்திருக்கிறார்.

-இரா.முத்தரசன்