Home நாடு 80 மில்லியன் சொத்து கொண்ட ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்

80 மில்லியன் சொத்து கொண்ட ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்

935
0
SHARE
Ad

ஈப்போ – பொதுவாக ஜசெக அரசியல்வாதிகளும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் எளிமையானவர்களாக, மிகச் சாதாரணப் பின்னணியைக் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், ஊழல் தடுப்பு ஆணையத்திடம் நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொத்து விவரங்களையும், வருமானத்தையும் அறிவிக்க வேண்டும் என்ற முடிவு அண்மையில் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல ஜசெக அரசியல்வாதிகள் வலுவான செல்வச் செழிப்புப் பின்னணியைக் கொண்டவர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.

சில நாட்களுக்கு முன் வெளிவந்த செய்திகளின்படி நிதியமைச்சர் லிம் குவான் எங்கின் வருமானம் பிரதமர் துன் மகாதீரின் வருமானத்தை விட அதிகம் என்ற தகவல் வெளியானது.

அதே போன்று அண்மையில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் இணையத் தளத்தில் பேராக் மாநிலத்தில் உள்ள புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ங்கே கூ ஹாம் (Ngeh Koo Ham – படம்) வெளியிட்டிருக்கும் அவரது சொத்து விவரம் 75 மில்லியன் ரிங்கிட் ஆகும்.

#TamilSchoolmychoice

ஆனால், தான் சமர்ப்பித்த தனது சொத்துக்களின் முழு மதிப்பு 80 மில்லியன் என அவர் தெரிவித்திருக்கிறார். தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் சார்பில் மேலும் 2 மில்லியன் சொத்துகளைப் பகிரங்கப்படுத்தியிருப்பதாக பேராக் மாநில ஜசெக ஆலோசகரான அவர் அறிவித்திருக்கிறார்.

ங்கே பேராக் மாநில சட்டமன்றத் தலைவருமாவார்.

இதுவரையில் அறிவிக்கப்பட்டவர்களில் இங்கே கூ ஹாம்தான் மிக அதிக சொத்துகளைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினராகக் கருதப்படுகிறார். அவரைத் தொடர்ந்து அடுத்த நிலையில் 32 மில்லியன் சொத்துகளோடு இருப்பவர் பிரதமர் துன் மகாதீர்.

தனது சொத்துகள் குறித்துக் கருத்துரைத்த ங்கே, ஒரு வழக்கறிஞராக 32 ஆண்டுகள் பணியாற்றியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். “கடவுள் என்மீது கருணை காட்டியிருக்கிறார். வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டதாக நான் மதிக்கின்றேன். அதனால் எனது சொத்துகள் குறித்தும் பகிரங்கமாக இருக்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கும் ங்கே, கடந்த 20 வருடங்களாக பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தான் பணியாற்றியதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

“முதல் 2 மில்லியன் ரிங்கிட்டைச் சம்பாதித்த பிறகு நான் அதிகமாக பணத்திற்காக வேலை செய்வதில் அக்கறை காட்டவில்லை. சமுதாயத்திற்காக உழைப்பதிலேயே ஆர்வம் காட்டினேன். ஆனால் எனது சொத்துகளின் மதிப்பும் அதன் மூலம் எனக்குக் கிடைத்த வருமானமும் அதிகரித்துக் கொண்டே போனது” என்றும் ங்கே கூறியிருக்கிறார்.

“என்னிடம் இருக்கும் பணம் எனது வாழ்க்கை முறையை மாற்றவில்லை. இன்னும் நான் எனது வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் இந்திய சிகையலங்காரக் கடையில் 6 ரிங்கிட்டுக்கு முடிவெட்டிக் கொள்கிறேன். சில சமயங்களில் நவீன சிகையலங்காரக் கடைக்குச் சென்று 15 ரிங்கிட்டுக்கு முடிவெட்டிக் கொள்கிறேன்” என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.

துன் மகாதீர் பிரதமராகப் பதவியேற்றப் பிறகு நம்பிக்கைக் கூட்டணியின் அனைத்து அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், அரசியல் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொத்து விவரங்களையும், வருமானத்தையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்ற முடிவு அறிவிக்கப்பட்டது.