கோலாலம்பூர் – பெல்டா குளோபல் வெஞ்சர்ஸ் நிறுவனம் தனது முன்னாள் இயக்குநர்கள், உயர் நிர்வாக அதிகாரிகள் 14 பேர் மீது தாங்கள் இழந்த 514 மில்லியன் ரிங்கிட்டைத் திரும்பப் பெறக் கோரி வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளது.
2014-ஆம் ஆண்டில் ஆசியன் பிளாண்டாஷன் லிமிடெட் (Asian Plantation Limited) என்ற சிங்கப்பூர் நிறுவனத்தை கையகப்படுத்தும் முடிவுக்காக இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. சரவாக் மாநிலத்தில் ஆசியான் பிளாண்டாஷன் சொத்துக்களைக் கொண்டிருந்ததோடு இலண்டன் பங்குச் சந்தையிலும் அந்நிறுவனம் பட்டியலிடப்பட்டிருந்தது.
வழக்கு தொடுக்கப்பட்டிருக்கும் 14 பேர்களும் தங்களின் பொறுப்புகளையும், கடமைகளையும் நேர்மையாகவும், நியாயமாகவும், தகுந்த பரிசீலனையின்றியும் மேற்கொண்டதற்காக பெல்டா இந்த வழக்கைத் தொடுத்திருக்கிறது.
இவர்களில் பெல்டாவின் முன்னாள் தலைவர் முகமட் இசா அப்துல் சமாட்டும் (படம்) ஒருவராவார்.
பெல்டா 120 மில்லியன் பவுண்ட்ஸ் (மலேசிய ரிங்கிட் மதிப்பில் 628 மில்லியன் ரிங்கிட்) விலையில் ஆசியன் பிளாண்டாஷன் நிறுவனத்தை வாங்கும் முடிவை அப்போதைய பெல்டா நிர்வாகம் எடுத்தது.
இதனை வாங்குவதில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக பெல்டாவுக்கு ஏற்பட்ட 514 மில்லியன் ரிங்கிட் இழப்பை சரி செய்வதற்காகவும், அந்தப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்காகவும், இந்த முன்னாள் இயக்குநர்கள், அதிகாரிகள் மீது பெல்டா வழக்கு தொடுத்திருக்கிறது.