புதுடில்லி – இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரை நோக்கி இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஊர்வலமாகச் சென்று அங்கு கூடவிருக்கின்றனர். நாளை ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 25-ஆம் தேதி சுமார் 2 இலட்சம் பேர் அயோத்தியில் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களை அயோத்தி நகருக்கு வெளியே தடுத்து நிறுத்த காவல் துறையினர் மும்முரமாக ஈடுபடுவர் என்பதால் அயோத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினரின் ரோந்து பலப்படுத்தப்படுகிறது. 144 தடை உத்தரவும் அங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய நிலத்தில் இராமர் ஆலயம் கட்டுவது தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க மறுத்து விட்டது. இதனால் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்து அமைப்புகள் அயோத்தியில் கூடவிருக்கின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தை மையமாகக் கொண்டு செயல்படும் சிவசேனா அமைப்பு, தாங்கள் முடிவு செய்தால் அடுத்த 17 நிமிடங்களில் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கி விடுவோம் என சவால் விடுத்திருப்பதால், அங்கு பதட்டம் அதிகரித்து வருகின்றது.
சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே தனது குடும்பத்தினருடன் இன்று அயோத்தியா வந்தடைந்திருக்கிறார்.
அடுத்த ஆறு மாதங்களில் இந்தியாவில் பொதுத் தேர்தல் வரவிருப்பதால் அயோத்தியா பிரச்சனை ஆளும் பாஜகவுக்கு ஒரு பெரும் தலைவலியாக உருவெடுக்கலாம் எனக் கருதப்படுகிறது.