Home வணிகம்/தொழில் நுட்பம் “தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எழுத்துருவாக்க முயற்சிகள்” – கேரளா பல்கலைக் கழகத்தில் முத்து நெடுமாறனின் உரை

“தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எழுத்துருவாக்க முயற்சிகள்” – கேரளா பல்கலைக் கழகத்தில் முத்து நெடுமாறனின் உரை

1518
0
SHARE
Ad
எழுத்துருவங்களின் வேறுபாடுகளை விளக்குகிறார் முத்து நெடுமாறன். வலது கோடியில் கேரளா பல்கலைக் கழகத்தின் பழஞ்சுவடிக் காப்பகத் தலைவர் முனைவர் சைனாபா,

(கடந்த நவம்பர் 22ஆம் நாள், கேரளப் பல்கலைக்கழகத்தில் மலேசியக் கணிஞரும், முரசு அஞ்சல், செல்லினம், செல்லியல் செயலிகளின் வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் ஒரு சிறப்புரை நிகழ்த்தினார். தமிழ், மலையாளம், மொழியியல், கணினி முதலிய துறைகளைச் சார்ந்த மாணவர்களும் பேராசிரியர்களும் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த துணைப் பேராசிரியர் விஜய இராஜேஸ்வரி, முத்து நெடுமாறனின் உரையை ஏற்பாடு செய்ய அவர் மேற்கொண்ட முயற்சி குறித்தும், உரையை மாணவர்களும் பேராசிரியர்களும் வரவேற்ற விதம் குறித்தும் அவர் வரைந்த கட்டுரையின் முதல்  பகுதி ஏற்கனவே வெளியிடப்பட்டது. இரண்டாம் பகுதியை இங்கே தந்துள்ளோம்)

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைப் பேராசிரியரும், கட்டுரையாளருமான விஜய இராஜேஸ்வரி

முத்து நெடுமாறன் உரை நிகழ்ச்சியில், பேராசிரியரும் துறைத்தலைவருமான முனைவர் ஹெப்சி  ரோஸ் மேரி வரவேற்புரை வழங்கினார். முத்து நெடுமாறன் கணினி எழுத்துருவாக்கப் பணியில் அவரது தொடக்க நாட்களில் சந்தித்த சவால்கள், தொடர்ந்து அந்தத் துறையில் அவர் மேற்கொண்ட பயணம், நிகழ்த்திய சாதனைகள், அதன் தற்போதைய நிலை ஆகிய அம்சங்கள் குறித்து தனது உரையின் தொடக்கத்தில் விளக்கினார்.

தமிழ் எழுத்துக்களின் தனித்தன்மையும், அந்த எழுத்துக்களின் வடிவங்களும் அழகு மிளிரும் வகையில் கணினி மற்றும் கையடக்கக் கருவிகளில் உருவாக்கிட  அவர் மேற்கொண்டு வரும் முயற்சிகளை தெளிவாக விளக்கிக் காட்டினார்.

பேராசிரியரும் துறைத் தலைவருமான முனைவர் ஹெப்சி ரோஸ் மேரி வரவேற்புரை நிகழ்த்துகிறார்
#TamilSchoolmychoice

1980-களில் தமிழ் எழுத்துக்களை முதன்முதலில் கணினித் திரையில்  மிகுந்த முயற்சிக்குப் பின்னர் காண முடிந்த போது அடைந்த மகிழ்ச்சி – “டெஸ்க் டாப் பப்ளிஷிங்” என அழைக்கப்படும் கணினி தட்டச்சு முறையில் தமிழ் எழுத்துருக்களை மிக நேர்த்தியாக உருவாக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் – 2000 ஆண்டுகளில் முதன்முதலாக செல்பேசிகளில் தமிழ் குறுஞ்செய்தி அனுப்ப எடுத்துக்கொண்ட முயற்சிகளில் அடைந்த வெற்றிகள் ஆகியவை குறித்து முத்து நெடுமாறன் விவரித்தார்.

தமிழ்மொழி மட்டும் அல்லாது பிற இந்திய மொழிகள் மற்றும் இந்தோ சீன, சிங்கள மொழிகள் ஆகியவற்றுக்கும் கணினி மற்றும் கையடக்கக் கருவிகளில் எழுத்துருவாக்க முயற்சிகள் மேற்கொண்டது குறித்தும் முத்து நெடுமாறன் விளக்கினார்.

முத்து நெடுமாறன் உரை கேட்க வந்தவர்களுடன் கட்டுரையாளர் முனைவர் விஜய இராஜேஸ்வரி

மதியம் 2 மணி முதல் 4 மணி வரை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி, கலந்து கொண்டவர்களின் வரவேற்பு, ஆர்வத்தால் மாலை ஐந்தரை மணி வரை நீண்டது.

எழுத்துருவாக்கவியலில் அவரது பணிகள் மட்டுமின்றி, மாணவர்களுக்கு தனது அனுபவத்தின் மூலம் பெற்ற ஊக்க மொழிகளையும் முத்து நெடுமாறன் எடுத்துரைத்தார்.

தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள் புதிய புதிய கோணத்தில் அதனைக் குறித்து சிந்திக்க தமிழ் மொழியை உலக அரங்கில் நிலை நிறுத்த பல்வேறு கோணங்களில் அவர்களின் சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டிவிடும் வகையில் அமைந்த முத்து நெடுமாறனின் உரை கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைகின்றது.

கேரளா பல்கலைக் கழகத்தின் பழஞ்சுவடிக் காப்பகத் தலைவர் சைனாபா மற்றும் இலங்கையின் மொழியியல் பேராசிரியர் தம்மிகா ஆகியோருடன் முத்து நெடுமாறன்

நான் கேரளப் பல்கலைக்கழகத்தில் மாணவியாக, துணைப் பேராசிரியராக இருந்தபோது கண்ட கனவு நிறைவேறும் காலகட்டத்தில், நான் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்திற்கு பணியின் காரணமாக மாற்றலாக நேர்ந்தது. புத்தம் புதிய கலைகள் மெத்த வளரும் மேற்கத்திய நாடுகளின் – பிற இந்திய மாநிலங்களின் தொழில்நுட்பங்களை – அறிவு வளர்ச்சியினை – தமிழ் மண்ணில் – உலகத்தமிழ் மக்கள் அனைவரின் தாய் வீடாம் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தில் இருந்து வளர்க்க ஓர் அரிய வாய்ப்பினை தற்போது பெற்றிருக்கிறேன்.

விரைவில் முத்து நெடுமாறனை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு அழைத்து எங்கள் மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இத்தகையதொரு உரையினை வழங்குமாறு அழைப்பு விடுத்திருக்கின்றேன். அவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

பழஞ்சுவடிக் காப்பகத்தில் உள்ள பனை ஓலைகளிலான சுவடிகளை ஆராய்கிறார் முத்து நெடுமாறன்

என் பேராசிரியர் பணியில், அறிவின் பரப்பில் வெளிக்கொணரப் படாமல் மறைந்திருக்கும் புதுப்புது வாய்ப்புகளை தாங்கிய அறிவு வெளிகளை கண்டறிந்து மாணவர்களுக்கு காண்பிப்பதை ஒரு பெரும் பணியாக கருதுகின்றேன். அவ்வகையில் தமிழ் கணினி எழுத்து உருவாக்க வியல் என்னும் புதிய துறையினை மாணவமணிகளுக்கு முத்து நெடுமாறன் மூலம் அறிமுகம் செய்ததில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

முத்து நெடுமாறன் தற்காலத்தின் மிகமுக்கியத் தேவையான புதுத்துறை ஒன்றினைக் கடினமாக முயன்று உழைத்து உருவாக்கி தன் வாழ்நாள் சாதனையாக அதனைச் செய்து காட்டி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். தற்போது இலண்டனில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் ரெடிங் பல்கலைக்கழகத்தில் “நவீனக் கருவிகளில் இந்திய மொழிகளுக்கான புதிய எழுத்து முறை வடிவங்கள்” என்ற தலைப்பில் முதுகலை படிப்பிற்காக அவர் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார்.

பேராசிரியர் ஜெயக்கிருஷ்ணன் முத்து நெடுமாறனுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்கிறார்

கேரளப் பல்கலைக்கழகத்தின் பழம்பெரும் கீழ்த்திசைச்சுவடி நூலகத்தில் ஓலைச்சுவடிகளில் தமிழ், மலையாளம்,  தேவநாகரி,  பெங்காளி எழுத்துருக்களின் எழுதுகோல் அசைவு நுட்பங்களை அவர் ஆய்ந்தபோது உடனிருந்து அதனைக் கற்றுக் கொண்டது நல்ல அனுபவம். அத்துறையின் தலைவர் முனைவர் சைனபா, முனைவர் ஆய்வாளர் இராஜதுரை,  ரம்யா, விஜி, மற்றும் அனைவரும் மிக ஈடுபாட்டோடு அனைத்து உதவிகளையும் செய்தனர்.

குறிப்பாக துறைத்தலைவர் சைனபா அவர்கள் உடனிருந்து பண்டைய மலையாள வரிவடிவங்களை விளக்கிய விதம் அருமை. தக்க சமயத்தில் எங்களுடன் இணைந்து கொண்ட திராவிட இந்தோ ஆரிய மொழியறிஞர், இலங்கை ருணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தம்மிக ஜெயசிங்கே அவர்களின் இந்திய எழுத்துருக்கள் குறித்த விளக்கங்கள் மிகச்சிறப்பாக அமைந்தன.

முத்து நெடுமாறன் உரைக்குப் பின்னர் பேராசிரியர் ஜெயக்கிருஷ்ணன் அவருக்கு பொன்னாடை அணிவித்து நன்றியுரை வழங்கினார்.