Home வணிகம்/தொழில் நுட்பம் கேரளா பல்கலைக் கழகத்தில் முத்து நெடுமாறன் உரையாற்றினார்

கேரளா பல்கலைக் கழகத்தில் முத்து நெடுமாறன் உரையாற்றினார்

1637
0
SHARE
Ad

திருவனந்தபுரம் – (கடந்த நவம்பர் 22 ஆம் நாள், கேரளப் பல்கலைக்கழகத்தில் மலேசியக் கணிஞரும், முரசு அஞ்சல், செல்லினம், செல்லியல் செயலிகளின் வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன், எழுத்துருவியல் குறித்த சிறப்புரை  ஒன்றை நிகழ்த்தினார்.  தமிழ், மலையாளம், மொழியியல், கணினி முதலிய துறைகளைச் சார்ந்த மாணவர்களும் பேராசிரியர்களும் இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைப் பேராசிரியர் விஜய இராஜேஸ்வரி, முத்து நெடுமாறனின் உரையை ஏற்பாடு செய்ய அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும், உரையை மாணவர்களும் பேராசிரியர்களும் வரவேற்ற விதம் குறித்தும் இரு பாகங்களாகக் கட்டுரை ஒன்றினை வரைந்துள்ளார். அதன் முதல் பகுதியைக் கீழே தந்துள்ளோம்)

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைப் பேராசிரியரும், கட்டுரையாளருமான விஜய இராஜேஸ்வரி

தமிழ் எழுத்து வடிவத் தொழில்நுட்பத்தின் கலைஞன்

கற்றல் – கற்பித்தல் -ஆய்வு என்ற பரந்து விரிந்த வாழ்க்கைச் சூழலில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது சில கருத்தரங்க உரைகளும் சிந்தனைகளும் நம் இயல்பு அறிவு வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடும். இரண்டு மணி நேர உரை நம்முடைய பத்து நாட்களுக்கும் மேலான நேரத்தை எடுத்துக்கொண்டு உரை சார்ந்த சிந்தனை உலகுக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும்.

அப்படியொரு வியப்பில் ஆழ்த்திய நிகழ்வினை தன்னில் பதித்து கொண்ட தினம் தான் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் நாள். என்னுடைய கல்வி – அறிவுசார் வாழ்க்கைப் பயணத்தில் இன்றைய தினத்தை மிகுந்த பலன் கிட்டிய நாட்களுள் ஒன்றாக நான் கருதுகின்றேன்.

#TamilSchoolmychoice

2011ஆம் ஆண்டு மலேசியப் பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாடு ஒன்றில் உரையாற்றச் சென்றிருந்த போது வணக்கத்திற்கும் மதிப்பிற்கும் உரிய பேராசிரியர் செ. இரா. செல்வக்குமார் ஐயா அவர்கள் எனக்கு ஒரு அரிய நட்பினை அளித்தார். மலேசியாவில் பிறந்து வளர்ந்து கணினியில் இன்று தமிழை விதவிதமாக எழுதிப் பார்த்து, உலகை வியக்க வைத்துக் கொண்டிருக்கும் கணினியியல் வல்லுநர் திரு முத்து நெடுமாறன்தான் அவர்.

பேராசிரியர் ஜெயக்கிருஷ்ணன் முத்து நெடுமாறனுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்கிறார்

உலகெங்கிலும் அவர் பயணம் செய்து வரி வடிவங்களின் வரலாற்றை நோக்கிய நேரத்தில், கேரளப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் பழஞ்சுவடிக் காப்பகப் புதையல், அவர் ஆய்வுக்கு உதவும் என்றறிந்து என்னைத் தொடர்பு கொண்டார். அப்போது அவரின் அரிய முயற்சியில் ஒரு சிறிய பங்காக என் உதவி அமைந்திருப்பதை எண்ணிப் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

நீண்ட நாட்களாக, நான் மாணவியாக இருந்த காலத்திலிருந்தே மனதில் இருந்த ஆவல் ஒன்று உண்டு. அது, ஒரு முறையாவது கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் அவரை அறிமுகம் செய்து விட வேண்டும் என்பதுதான். என் உள்ளத்தின் ஆவலை நான் அவரிடம் வெளியிட்டேன். ஐயா, நீங்கள் தமிழ்த் துறைக்கு வர வேண்டும்; அங்கு உங்களது எழுத்து வடிவமைப்பு குறித்துப் பேச வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டவுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். இன்றல்ல கடந்த 7 ஆண்டுகளாக நான் காத்துக்கொண்டிருந்த தருணம் கைவரப் பெற்ற நேரத்தில், நான் அடைந்த மகிழ்ச்சியை எழுத்துக்களால் இங்கே கூற இயலாது.

எழுத்துருவியல் குறித்த முத்து நெடுமாறன் உரை கேட்க வந்தவர்களில் ஒரு பகுதியினர்

கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை குறித்து நான் இங்கே சற்றுக் கூற வேண்டும். பல்கலைக்கழகத்திலேயே மிகப் பழமையான துறைகளில் ஒன்று தமிழ்த்துறை. புகழ்பெற்ற பேராசிரியர்கள் பலர் பணியாற்றிய துறை. பேராசிரியர் இராகவ ஐயங்கார், பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் பேராசிரியர் , முனைவர் வ. ஐ. சுப்பிரமணியம் , பேராசிரியர் சா வே. சுப்பிரமணியன், பேராசிரியர் இளைய பெருமாள், பேராசிரியர் குளோரியா சுந்தரமதி, பேராசிரியர் நாச்சிமுத்து போன்ற புகழ்பெற்ற பேராசிரியர்கள் பணியாற்றிய துறை.

மரபு இலக்கணம், மொழியியல், மொழிபெயர்ப்பியல், சங்க இலக்கியம், தமிழ், மலையாள நாட்டுப்புறவியல், புலம்பெயர் இலக்கியம் ,கல்வெட்டியல் ,மொழித் தொழில்நுட்பம், தமிழ் மலையாள ஒப்பிலக்கணம், முதலிய பல துறைகளில் இங்கே ஆய்வுகள் நிகழ்த்தப் பெறுகின்றன.

நான்கு துணைவேந்தர்களை தமிழ் உலகுக்கு அளித்த துறை. பல கேரள, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழைக் கற்பித்து, தமிழ் மொழியை கேரளத்தில் வளர்த்துக் கொண்டு இருக்கும் மிக முக்கியமானதொரு கல்விக்கூடம், ஆராய்ச்சி மையம். தமிழ் அறிஞர்களை உருவாக்கி உலகுக்கு அளித்துக் கொண்டிருக்கும் கேரளத்தின் தமிழ்க் கல்வி மையம்.

இங்கே தமிழில் முதுகலை, முனைவர் பட்ட ஆய்வு, முது முனைவர் பட்ட ஆய்வுகள், தமிழ் மலையாள துறைசார் கல்வி போன்றவை அளிக்கப்படுகின்றன. இவ்வாறு பலதுறை ஆய்வுகளில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கும் இத்துறையில் திரு. முத்து ஐயா அவர்களின் உரையினை ஏற்பாடு செய்வதை மிகப்பெரிய சாதனையாகக் கருதுகின்றேன்.

புதிய துறைசார் அறிவுத்தேடல் , சமகால முக்கியத்துவம் வாய்ந்த மொழித் தொழில்நுட்பம் , எனச் சிறப்பு வாய்ந்த பயன் தரும் ஆய்வுக்களங்களை உள்ளடக்கியது அவரது சிந்தனை. இன்றையக் காலகட்டத்தில் கணினி யுகத்தில் தமிழ் மொழியை அதன் எந்தச் சிறப்பும் சற்றும் குறையாமல் நிலைநிறுத்திட தன் ஆழமான விருப்போடு, அர்ப்பணிப்போடு, பாடுபடும் ஒருவரின் உரையை இத்துறையில் ஏற்பாடு செய்ய இயன்றதை மிகப் பெரிய செயலாகக் கருதுகின்றேன்.

துறைத் தலைவரைத் தொடர்பு கொண்டு உரைக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டபோது அவர் மிக்க மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். பிற பேராசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர் . கேரளப்பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கில் அப்பல்கலைக்கழகத்தின் பிறதுறை மாணவர்களான மலையாளம், மொழியியல், சமஸ்கிருதம் , அரபி ஓலைச்சுவடித்துறை எனப் பல துறை மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர் . அனைவரும் திரு. முத்து அவர்களை அன்போடு வரவேற்றனர்.

அடுத்து:

“கேரளா பல்கலைக் கழகத்தில் முத்து நெடுமாறன் நிகழ்த்திய உரை” – இரண்டாம் பாகம்