Home நாடு மாரா இளநிலை கல்லூரிகளில் இந்தியர்களுக்கும் வாய்ப்பு – இறுதி நாள் டிசம்பர் 4

மாரா இளநிலை கல்லூரிகளில் இந்தியர்களுக்கும் வாய்ப்பு – இறுதி நாள் டிசம்பர் 4

1141
0
SHARE
Ad
சிலாங்கூர், கோலகுபு பாருவில் அமைந்துள்ள மாரா இளநிலைக் கல்லூரியின் தோற்றம்

புத்ரா ஜெயா – நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் Maktab Rendah Sains Mara (M-R-S-M) என்றழைக்கப்படும் மாரா இளநிலை அறிவியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் அரிய வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். இந்தக் கல்லூரிகளில் 2019ஆம் கல்வி ஆண்டுக்கான பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பங்களுக்கான இறுதி நாள் டிசம்பர் 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகமாக இந்திய மாணவர்கள் மாரா இளநிலைக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இதுவரை விண்ணப்பிக்காத இந்திய மாணவர்கள் விரைந்து பதிவுசெய்யும்படி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த ஆர்.சிவராசா

கடந்த சனிக்கிழமை நவம்பர் 24-ஆம் தேதி பத்திரிக்கையாளர்களுடன் நடத்திய சந்திப்பின்போது புறநகர் மேம்பாட்டு துணையமைச்சரும் சுங்கை பூலோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சிவராசா மாரா இளநிலைக் கல்லூரிகளில் பயில்வதால் ஏற்படும் இந்திய மாணவர்களுக்கு ஏற்படும் நன்மைகள், விண்ணப்பம் செய்வதற்கான நடைமுறைகள் ஆகியவை குறித்து தனது குழுவினருடன் விளக்கமளித்தார்.

#TamilSchoolmychoice

மாரா கல்லூரிகள் மற்றும் அதன் அமைப்பு புறநகர் மேம்பாட்டு அமைச்சின் கீழ் வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

யுபிஎஸ்ஆர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

நாளை வியாழக்கிழமை 29 நவம்பர் 2019-ஆம் தேதி யு.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் வெளிவருகின்ற நிலையில், தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த பலர் விண்ணப்பிக்க ஏதுவாக அதற்கான காலக்கட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு இன்னும் அதிகமானோர் இக்கல்லூரிகளில் இணைய mohon.mrsm.edu.my/form1/login.jsp என்ற அகப்பத்தின் வழி பதிந்து கொள்ளலாம்.

மேலும், கிள்ளான் பள்ளத்தாக்கு வட்டார மாணவர்களும் அவர்தம் பெற்றோர்களும் நாளை வியாழக்கிழமை (நவம்பர் 29) இரவு 7.00 மணிக்கு சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் நடைபெறும் விளக்கமளிப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். யு.பி.எஸ்.ஆர் தேர்வில் 3 – ஏ’க்களுக்கு மேல் பெற்றுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து தேசியப் பள்ளி, சீனப்பள்ளிகளில் பயின்ற இந்திய மாணவர்களும் அழைக்கப்படுகின்றனர்.

இவ்விளக்கமளிப்புக் கூட்டத்தில் மாரா இளநிலை கல்லூரிகளில் இணைவதன் மூலம் கிடைக்கவிருக்கும் நன்மைகள் குறித்து விளக்கப்படும் அதே வேளையில் மாணவர்கள் உடனடியாக பதிவு செய்வதற்கான உதவிகளும் வழங்கப்படும். கிள்ளான் வட்டார மாணவர்கள் இவ்வாய்ப்பினை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

புறநகர் மேம்பாட்டு அமைச்சின் கீழ் செயல்படும் மாரா இளநிலைக் கல்லூரிகள் அனைத்துலக தரத்திலான கல்விச் சூழலில் முழு தங்கும் வசதியுடன் கல்வி பயில்வதற்கான வாய்ப்பினை வழங்குகிறது. இதனை இந்திய மாணவர்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என i25 இந்திய அரசுசாரா அமைப்புகள் கூட்டமைப்பின் கல்வி பிரிவு இயக்குநர் குணசேகரன் கந்தசுவாமி குறிப்பிட்டார்.

மாரா இளநிலைக் கல்லூரிகளில் இந்திய மாணவர்கள் நட்புறவான சூழலில் கல்வி கற்பதற்கு புறநகர் மேம்பாட்டு அமைச்சு பலதரப்பட்ட மாற்றங்களைச் செய்துள்ளது. கடந்த காலத்தில் காணப்பட்ட சில பலவீனங்கள் சரிசெய்யப்பட்டு இந்திய மாணவர்கள் இக்கல்லூரிகளில் எவ்வித அச்சமுமின்றி பயில்வதற்கு பலதரப்பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனவே, பெற்றோர்கள் முன்வந்து இக்கல்லூரிகளில் இணைவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என குணசேகரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யு.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகளைப் பெற்ற மாணவர்கள் 3 Aக்கள் பெற்றிருந்தால் mohon.mrsm.edu.my/form1/login.jsp என்ற அகப்பக்க முகவரியில் விரைந்து விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

விண்ணப்பத்தை நிறைவு செய்தபின் அதன் நகலினை shan@rurallink.gov.com மற்றும் i25harapan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேல் விபரங்களுக்கு 03-7710 0140 அல்லது 03-7710 0142 என்ற எண்களுக்கும் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.