ஜோர்ஜ் டவுன்: இந்நாட்டில் இந்து கோவில்களை நிர்வகிப்பதற்காக தேசிய இந்து அறவாரியம் அமைக்கும் திட்டத்தினை நன்கு சீர்தூக்கி பார்க்குமாறு பினாங்கு துணை முதல்வர் பி. இராமசாமி கேட்டுக் கொண்டார். பினாங்கு இந்து அறவாரியத்தின் (Penang Hindu Endowments Board) தலைவரான, இராமசாமி கூறுகையில், இந்து மதத்தின் பன்முக தன்மையைக் கருத்தில் கொண்டே இவ்வாறு கூறுவதாகக் கூறினார்.
நல்ல யோசனையாக இருப்பினும், தேசிய ரீதியிலான இந்த அறவாரியம் அமைக்கப்படுவதற்கு முன்பு நுட்பமான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்றார். மேலும் பேசிய இராமசாமி, கிறிஸ்துவ மதத்தில் செயல்படுத்தப்படும் நிருவாக முறையை ஒப்பீடாக முன்வைத்தார். ஒவ்வொரு பிரிவும் தங்களுக்கான சொந்த வழிபாட்டு முறைகளைப் பராமரித்து வருவதைச் சுட்டிக் காட்டி, இந்து கோவில்களில் இந்த வகையான அமைப்பு இல்லை என்பதைக் கூறினார். பெரியளவிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்புதான் இவ்வாறான வாரிய அமைப்புகள் குறித்து சிந்திக்கலாம் என்றார் அவர்.
நாட்டிலுள்ள இந்து கோவில்கள், புனித நூல்கள் மற்றும் நாட்டில் வேறு எந்த இந்து மதம் தொடர்பான வழிபாட்டு இடங்கள் உள்ளன என ஆய்வு செய்ய சிறந்தவொரு ஆராய்ச்சி குழுவினை நியமித்து செயல்பட அவர் பரிந்துரைத்தார். இவ்வாறு செயல்படுத்தும் பொழுது, எந்தெந்த கோயில்கள் அரசு அல்லது தனியார் நிலங்களில் உள்ளன என்பதை அறியலாம். சீ பீல்ட் மகா மாரியம்மன் கோயில் சம்பவம், நல்லதொரு துவக்கத்தை தரும் என நம்புவதாகச் அவர் சொன்னார்.
இவ்வாராய்ச்சி குழு உடனடியாக வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டுமென்றும், பிரதமர் இலாகா இதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இராமசாமி கேட்டுக் கொண்டார்.