Home நாடு சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளி – வரலாற்றுப் பின்புலம்

சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளி – வரலாற்றுப் பின்புலம்

3638
0
SHARE
Ad
கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளியின் தோற்றம்

(ஆண்டுதோறும் யுபிஎஸ்ஆர் தேர்வுகளில் நாட்டிலேயே முதல் நிலையில் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெறும் பள்ளி கிள்ளானில் இயங்கி வரும் மிகப் பெரிய பாரம்பரியத்தையும், வரலாற்றையும் கொண்ட சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளி. அந்தப் பள்ளியின் வரலாற்றுப் பின்புலத்தை விளக்குகிறார், அந்தப் பள்ளியோடு நீண்ட காலமாக அணுக்கமானத் தொடர்பு கொண்டிருப்பவரும், அந்தப் பள்ளியில் முன்பு ஆசிரியராகப் பணியாற்றியவருமான கவிஞர் முரசு நெடுமாறன்)

சிலாங்கூர் மாநிலத்தின் அரச நகராக விளங்குவது கிள்ளான் பட்டணமாகும். இது பல சிறப்புகளைக் கொண்ட பழம்பெரும் நகர். 200 ஆண்டுகளுக்கு முன் தென்னகத்திலிருந்து தொழில் நாடிப் புலம்பெயர்ந்து வந்தோர், கரை இறங்கிய இடமான கோலகிள்ளான் (இப்போது கிள்ளான் துறைமுகம்) இங்கிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது. இன்றுவரை தமிழர் மிகுதியாக வாழும் பகுதியும் இதுவே.

நகரின் மைய முதன்மைச்சாலை முழுவதும் சற்றேறக் குறையத் தமிழர் கடைகளே நிறைந்த பட்டணம் இது. திருமணங்களுக்கும் திருநாள்களுக்கும் வேண்டிய புடவை, வேட்டி, நகை, குத்துவிளக்குப் போன்ற பாரம்பரியப் பண்பாட்டுப் பொருள்கள் வாங்க பிற மாநிலங்களிலிருந்தெல்லாம் மக்கள் வருகை புரியும் நகர் இதுவாகும். இச்சிறப்புகளோடு, இப்பகுதிவாழ் தமிழர்களின் தாய்மொழிப் பற்றுக்குச் சான்றுகூறும் வண்ணம் கடந்த நூற்றாண்டிலிருந்து இங்குக் கம்பீரமாக நிலைத்திருக்கும் கலைக்கோயில் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியாகும்.

#TamilSchoolmychoice

இப் பள்ளி கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் (1904) கிள்ளான் நகர மையத்தில் நிறுவப் பெற்றது. இதனை நிறுவியவர் பெரியவர் இரா. கோபல்சுவாமி ஐயங்கார். அப்பள்ளி ஆறு ஆண்டுகளுக்குப் பின் சிம்பாங் லீமா எனப்படும் ஐந்து சாலைகள் சந்திக்கும் பகுதிக்கு மாற்றப்பட்டது.

நகரின் முதன்மைச் சாலையான ஜாலான் துங்கு கிளானாவில் (அன்று ரெம்பாவ் தெரு) ஓராண்டு காலம் இயங்கி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. நைனா செட்டியார் என்று அழைக்கப்பெற்ற கோபால்சுவாமி ஐயங்கார் (இவர் தமிழகத்தின் தஞ்சாவூர்ப் பகுதியைச் சேர்ந்தவர். செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்லர்) கொடையாக வழங்கிய சொந்த நிலத்தில் (கிள்ளான் போக்குவரத்துக் காவல் நிலையத்திற்கு எதிர்ப்புறத்தில்) 1911-இல் பள்ளி புதுவாழ்வு பெற்றது. அந்த இடம் ஐந்து சாலைகள் இணையும் சாலை வட்டத்தை ஒட்டி அமைந்திருந்ததால், அது பள்ளி ‘சிம்பாங் லீமா’ தமிழ்ப்பள்ளி என்று பெயர்பெற்றது. இப்போது சாலை வட்டத்தில் ஏழு சாலை இணைந்திருப்பினும், பள்ளி தாமான் ஸ்ரீ அண்டலாசில் அமைந்திருந்ததாலும் பழைய பெயரிலேயே இயங்கி வருகிறது.

பல நல்ல உள்ளங்கள் அளித்த ஆதரவோடு இப் பள்ளி தொடக்கம் முதலே துடிப்போடும் புகழோடும் செயல்பட்டு வந்தது. அப்பொழுது தனிப் பாட வகுப்புகளாக நடத்த 6,7ஆம் வகுப்புகள் இங்கு நடந்துள்ளன. பல ஆசிரியர்கள் ஆயத்த ஆசிரியர் தேர்வெழுதி ஆசிரியர்களாக, இது களமாய் இருந்துள்ளது. குறள் வகுப்புப் போன்ற சிறப்பு வகுப்புகளும், சமயச் சொற்பொழிவுகளும், நாடகப் பயிற்சிகளும், பொது இயக்கங்களின் ஆண்டுக் கூட்டங்களும் மாநாடுகள் கூட இங்கு நடந்துள்ளன. இலவய வகுப்புகளும் இப் பள்ளியில் நடந்துள்ளன.

1932-ஆம் ஆண்டிலேயே இது முழு உதவி பெறும் அரசு பள்ளியானதால் கல்வியமைச்சு 1963-ஆம் ஆண்டில் இதற்கு முன்பிருந்த இடத்திற்குச் சற்றே தள்ளி புதிய இரண்டு மாடிக் கட்டடம் கட்டி தந்தது. அதற்கு அப்போதைய கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் அமைச்சருமான (டான்ஸ்ரீ) வெ. மாணிக்கவாசகம் நல்கை பெற்றுத்தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின் பள்ளியின் சிறப்பு பல மடங்கு கூடியது. நகர் வாழ் தமிழ் மக்களின் சமூக நடவடிக்கைகளுக்கு அது மையப்புள்ளியாக விளங்கியது. காலப் போக்கில் இந் நிலை மாறத்தொடங்கியது. பக்கத்திலிருந்த தேசிய இடைநிலைப் பள்ளியை (SMK STAR) விரிவாக்கக் கருதிய கல்வித்துறை இப் பள்ளியை இடமாற்ற முயன்றது. ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பால் பண்டமாரான் பகுதியில் ஒரு பள்ளியைக் கட்டி, அங்கு இதனை இடம் பெயரப் பணித்தது. அப்படியொரு மாற்றத்தைப் பெற்றோர் விரும்பவில்லை. பள்ளி வாரியமும் இடம்பெயர மறுத்தது. அப்போதைக்கு அம்முயற்சி கைவிடப்பட்டது. எனினும் தொடர்ந்து பள்ளியை இடமாற்றம் செய்யும் முயற்சியைக் கல்வித்துறை கைவிடவில்லை.

இப்போது ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள பள்ளியை எழுப்பி, அங்குச் செல்லுமாறு பணித்தபோது, பெற்றோர் ஆசிரியர் சங்கம் பழையபடியே இடமாற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு பெரும் போராட்டமே வெடித்தது. அப்போதைய பொதுப்பணி அமைச்சர் துன் ச. சாமிவேலு தலையிட்டு, பெற்றோருக்குச் சூழலை விளக்கி, எதிர்கால நன்மைகளை உணர்த்தினார். பேருந்து ஏற்பாட்டின் மூலம் போக்குவரத்துச் சிக்கல்களைத் தீர்க்கலாமென்றார். பெற்றோரும் நம்பிக்கையோடு இடமாற்றத்திற்கு ஒப்புக் கொண்டனர்.

நகர மையத்தில் நம் பள்ளிக்கு இடமில்லாமல் போகுமென்ற வருத்தத்தாலும் பிள்ளைகள் அங்குச் செல்ல முடியுமா, பிள்ளைகள் குறைந்தால் பள்ளி சிறுத்துக் காணாமல் போய்விடுமோ என்ற அச்சத்தாலுமே பெற்றோர் இடமாற்றத்துக்கு மறுத்தனர். பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டதாலும் காலப்போக்கில் சமுதாயத்தில் சற்று வளம்கூடிப் பலர் சொந்தப் போக்குவரத்து வசதியைப் பெற்றதாலும் பள்ளி நிலைத்தது என்பதோடு, நாட்டிலேயே 2500 மாணவர்களையும் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களையும் கொண்ட பெரிய பள்ளி என்னும் பெயரையும் பெற்றது. பிள்ளைகள் நாளுக்கு நாள் பெருகியதால் அவ் வட்டாரத்தின் மற்றொரு பகுதியில் (தாமான் செந்தோசா) நடுவணரசு எல்லா வசதிகளும் கொண்ட ஒரு புதிய பள்ளியைக் கட்டிக்கொடுத்திருக்கிறது. அண்மையில் இப் பள்ளியிலிருந்து 200 மாணவர்களும் 4 ஆசிரியர்களும் அப் பள்ளிக்கு மாற்றலாகிச் சென்றுள்ளனர்.

சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி கல்வி அமைச்சால் சிறப்புத் தகுதி வழங்கப் பெற்ற முதல் தமிழ்ப்பள்ளி. இப்போது அந்தத் தகுதியில் ஏழெட்டுப் பள்ளிகள் உள. கல்வி அமைச்சு வழங்கிய சிறப்புத் தகுதி ‘Sekolah Kluster’ என்பதாகும். இது ‘குழுவக’ப் பள்ளி என்றும் ‘திரட்டு’ப் பள்ளி என்றும் இருவகையாக மொழியாக்கம் செய்யப்பெற்றுள்ளது. ‘குழுவகப் பள்ளி’ என்பதே பொருத்தம் என்று முன்னாள் தேசிய அமைப்பாளர் திரு. சு. பாஸ்கரன் முதலிய கல்வியாளர்கள் கூறுகின்றனர். எனினும் சிம்பாங் லீமா பள்ளி ‘திரட்டுத் தமிழ்ப்பள்ளி’ என்றே அழைக்கப்பெற்று வருகிறது. தற்போது பள்ளியை நிருவகித்துவரும் தலைமையாசிரியர் திரு சந்திரன் இரத்தினம் அவர்கள் ‘நனிசிறந்த திரட்டுப்பள்ளி’ என்று அழைத்து அப்பெயருக்கு அழகு சேர்த்துள்ளார்.

சிறப்புத் தகுதி பெற்ற பள்ளி என்னும் வகையில் இங்குப் பாரம்பரிய கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கு முதன்மை தரப்பெறுகிறது. அதற்கேற்ற தகுதியுடைய ஆசிரியர் பெருமக்கள் இங்குள்ளனர்.

அதற்குச் சான்று முன்பே குறிப்பிட்டதுபோல் அண்மையில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடந்த முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாட்டில் இப் பள்ளி மாணவர்கள் படைத்த ‘நான்கு கோடி’ என்னும் கவிதை இலக்கிய நாடகமாகும்.

மேலும், அண்மையில் தேசிய அளவில் நடந்த நடனப் போட்டியில் இப் பள்ளி மாணவர்கள் வென்று தங்கப் பதக்கம் பெற்றது மற்றொரு சான்று. அவ்வப்போது பள்ளிகளுக்கிடையில் நடக்கும் விளையாட்டு, மொழி, கலை தொடர்பான போட்டிகளிலும் இப்பள்ளி மாணவர்கள் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.

ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் தரத்தை உயர்த்த இடையிடையே கருத்தரங்குகள், சொற்பொழிவுகள், மாணவர்களுக்குப் பயிலரங்குகள் போன்றவையும் இங்கு நடந்து வருகின்றன. பொதுவாகச் சொல்ல வேண்டுமெனில், பெற்றோரின் நம்பிகையையும் வற்றாத ஆதரவையும் இப் பள்ளி பெற்றுள்ளது பெருமைக்குரிய செய்தியாகும்.

ஒரு சமுதாயத்தின் உயர்வுக்கும் பண்பாட்டுச் செழுமைக்கும் கலை இலக்கிய மேம்பாட்டிற்கும் தொடக்கப் பள்ளிகளே அடிப்படை எனலாம். ஆறு ஆண்டுகள் வளமான எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் நாற்றங்கால்களாய்த் தொடக்கப் பள்ளிகளே மிளிர்கின்றன. நற்பேறாக மலேசியத் திருநாடு தாய்மொழிகளைப் பயிற்றுமொழிகளாய்க் கொண்ட தொடக்க பள்ளிகளுக்கு (தமிழ், சீனம்) இடமளித்து நிலைப்படுத்தி வருகிறது.

எதிர்கால மருத்துவர்கள், பொறியியலாளர்கள்,  கணக்காய்வாளர்கள், கல்விமான்கள், இலக்கியவாணர்கள், சமுதாய அரசியல் தலைவர்கள் போன்றோர் உருவாக அடிப்படை போடும் இடம் தொடக்கப் பள்ளியே. மாணவர்கள் அங்கு வளார்ந்து புதிய தலைமுறையாகின்றனர்.

இப்பொழுது 52 விழுக்காட்டுப் பெற்றோர் தம் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிக்கு அனுப்புகின்றனர். சீனர்களில் 90 விழுக்காட்டிற்கு மேற்பட்டோர் சீனப் பள்ளிக்கே அனுப்புகின்றனர். மலேசியாவின் அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் தமிழ் மாணவர் எண்ணிக்கை 171,000. தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர் எண்ணிக்கை 90,000. தேசியப் பள்ளிகளில் பயிலும் தமிழ் – இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 67,000. சீனப்பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவர் எண்ணிக்கை 14,000. அடைவு நிலைத் (UPSR) தேர்வில் 13 / 14 ஆயிரம் தமிழ் மாணவர்கள் தமிழ்ப் பள்ளிகளிலிருந்து பங்கு கொள்கின்றனர்.

ஓருலக (ஐக்கிய நாடுகள்) அவை (UNICEF) மனிதன் தொடக்கக் கல்வியைத் தாய் மொழியில் பெறுவதே இயற்கையானது என்று அறிவித்துத் தாய் மொழிக் கல்வியை வலியுறுத்திப் பிப்ரவரி மாதம் 21ஆம் நாளை உலகத் ‘தாய் மொழி நாளாக’ அறிவித்து ஊக்கப்படுத்தி வருகிறது.

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ப் பள்ளிகளில் பயின்ற மாணவர் எண்ணிக்கை 49 விழுக்காடாக இருந்தது. சமுதாய இயக்கங்களின் இடைவிடாத தொண்டால் இன்று 52 விழுக்காட்டை எட்டியுள்ளது. இது பெரிய வளர்ச்சி இல்லை. எனினும், இனி அது விரைவு கொள்ளும் சூழலை உருவாக்க வேண்டும். ‘தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு’ என்ற இயக்கத்தின் மூலம் எண்ணிக்கை குறையாமல் காக்கப்பெற்றது எனலாம்.

இப்பொழுது ஆளும் புதிய (பக்காத்தான் ஹரப்பான் -நம்பிக்கைக் கூட்டணி) அரசு தாய்மொழிக் கல்விக்கு முதன்மை தந்து வருகிறது. மனிதவள அமைச்சர் மாண்புமிகு குலசேகரன், அனைத்துத் தமிழரும் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிக்கே அனுப்ப வேண்டும்மென்று முழக்கமிட்டு வருகிறார். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பல்கலைக்கழகம் வரை தடையின்றித் தமிழ் கற்று மேன்மையுற வழிவகை காண வேண்டுமென்று பேரார்வம் கொண்டுள்ளனர், நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சிவகுமார் போன்ற பலர்.

சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி வரலாற்றில் மேற்படி செய்தியை ஏன் சேர்க்க வேண்டுமென்று சிலர் எண்ணலாம். ஆயிரம் சொற்பொழிவைவிட, ஐயாயிரம் வேண்டுகோளைவிட, பெற்றோர்க்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வண்ணம் பள்ளிகள் அமைந்து சிறப்புறச் செயல்பட்டால், மேம்பாடு தானே வந்து மலரும்.

இப்பொழுது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிவியல், கலை, இலக்கியங்களில் உலக அளவு வெற்றி வாகை சூடி வருகின்றனர். இவ்வாண்டு ஆசிய அளவில் நடந்த ஆங்கில நாடகப் போட்டியில் மாசாய் குழுவகத் தமிழ்ப்பள்ளி முதல் பரிசு பெற்றதைப் பலர் அறிவர். ஆசிரியை கஸ்தூரி இராமலிங்கம் தலைமையில் அமைந்த அசிரியர்கள் சிலர் இணைந்து கடுமையாக முயன்று அனைத்து மொழிப் பள்ளிகளையும் வென்று ஆங்கில நாடகப் போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முதல் நிலை பெறச்செய்தமை அரிய செயல், மிகமிக அரிய செயல். பெருமைப்படத்தக்க பெருஞ்செயலாகும். நம் மாணவர்கள் எவர்க்கும் சளைத்தவர்கள் அல்லர் என்பதனை அண்மைக்காலமாக மெய்ப்பித்து வருகின்றனர்.

அடைவு நிலைத் தேர்வுகளிலும் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. வரும் புத்தாண்டு தொடங்கி அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கூட வேண்டும். நாட்டுணர்வோடு தாய்மொழி உணர்வும் ஓங்க வேண்டும், என்பது சமுதாய நலம்நாடும் தலைவர்கள் எண்ணமாகும்.

இன்று புகழின் உச்சியில் இருக்கும் சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளி, பெற்றோர் ஆசிரியர் சங்கமும், பள்ளி வாரியமும், செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா. தியாகராஜன் போன்ற கொடைநெஞ்சர்களும் அளித்துவரும் பேரூக்கத்தால் பள்ளி தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

இப்பள்ளி உருவான காலத்தில் திரு. முத்துசாமி அவர்கள் தலைமையாசிரியராய்ப் (1904-1923)பணியாற்றியதைத் தொடர்ந்து, பல தலைமையாசிரியர்களும் வகுப்பாசிரியர்களும் சிறப்புறப் பணியாற்றி இதன் மாண்பு குறையாமல் காத்துவந்தனர். திரு. வீரபாண்டியன் தலைமையாசிரியராய் அமர்த்தப்பட்ட காலத்திலிருந்து (2001-2004) இப்பள்ளி அடைவுநிலைத் தேர்ச்சி முதலியவற்றால் மிகவிரைந்த முன்னேற்றத்தை நோக்கி நடைபோடத் தொடங்கியது. தொடர்ந்து திருமதி எலிசபெத் அன்னரஞ்சிதம் காலத்தில் சிறப்புநிலைப் ‘Sekolah Kluster’ பள்ளியாகவும், நாட்டிலேயே பெரிய தமிழ்ப்பள்ளியாகவும் சிறந்த பள்ளியாகவும் புகழ்பெறச் செய்தார். கடந்த ஆண்டு வரை தலைமையாசிரியராய்ப் பணியாற்றிய திருமதி. க. கோகிலவாணி அம்மையார் அந்த நிலையைத் தக்கவைத்துக் கொள்வதிலும் வளர்ச்சி நோக்கி நடைபோடும் பள்ளியாகவும் புகழ்பெறச் செய்வதில் கடும் உழைப்பைக் கொட்டி நல்ல முறையில் நிருவகித்து வந்தார்.

கடந்த ஆண்டு ஜூலை 2017 முதல் திரு. சந்திரன் இரத்தினம் அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வருகிறார். பள்ளி வளர்ச்சியில் பெருநாட்டம் கொண்ட அவர் பள்ளியை, ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறார். மேலும் இப்பள்ளியைச் சிறந்த அடைவுநிலைப் பள்ளியாக்க (Sekolah Berprestasi Tinggi) எண்ணங் கொண்டுள்ளதோடு, மாணவர்கள் நற்பண்பு மிக்கவர்களாக வளரச் செய்ய வேண்டுமென்பதில் கருத்தாகச் செயல்பட்டு வருகிறார்.

அதனோடு, 21ஆம் நூற்றாண்டு கல்வி முறையை பள்ளியில் செயலாக்கப்படுத்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் மிகுந்த துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். இவரின் ஆளுமைத்திறன் பள்ளியின் தரத்தை மேலும் உயர்த்துமாக.