நியூயார்க் – அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு உலகம் முழுவதும் பரவியிருக்கும் தொலைக்காட்சி ஊடகமான சிஎன்என் நிறுவனத்தின் நியூயார்க் அலுவலகங்களுக்கு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 10.30 மணிக்கு அந்த அலுவலகங்களிலிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து அந்த அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து வெடிகுண்டு தொடர்பான சாதனங்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை என அமெரிக்கக் காவல் துறையினர் கூறியிருக்கின்றனர்.
நேற்றிரவு 10.00 மணியளவில் நியூயார்க்கின் மான்ஹாட்டன் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள டைம் வார்னர் சென்டருக்கு வந்த தொலைபேசி அழைப்பு ஒன்றில் அந்தக் கட்டடத்தில் 5 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. இந்தக் கட்டடத்தில்தான் சிஎன்என் தொலைக்காட்சியின் அலுவலகங்கள் அமைந்திருக்கின்றன.
வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கையில் இறங்கிய காவல் துறையினர் அந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டத்துக்கு தடைவிதித்து, சோதனையிட்டனர். வெடிகுண்டுகளைச் செயலிழக்கும் படையினர் களமிறக்கப்பட்டு, கட்டடத்தையும், அந்தப் பகுதியையும் அணு அணுவாகச் சோதனையிட்டனர்.
அதைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வெறும் புரளி என்று அறிவித்த காவல் துறையினர் அந்தப் பகுதியை மீண்டும் போக்குவரத்துக்கு நேற்று நள்ளிரவுக்கு முன்னதாக மீண்டும் திறந்து விட்டனர்.