புதுடில்லி – நாளை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 11) வெளியாகவிருக்கும் ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளும் பாஜக அரசாங்கத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு அதிர்ச்சியாக இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியின் ஆளுநர் (கவர்னர்) உர்ஜித் பட்டேல் (படம்) இன்று மாலை திடீரென தனது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
இந்தியாவின் வணிக வட்டாரங்களில் இந்த முடிவு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி இருவருக்குமான செல்வாக்கு இதனால் கடுமையான சரிவை எதிர்நோக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தனது தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக தான் பதவி விலகுவதாக உர்ஜித் பட்டேல் அறிவித்திருக்கிறார். எனினும் இந்தப் பதவி விலகல் பாஜக அரசாங்கத்திற்கு மற்றொரு நெருக்கடியை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
2016-இல் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்த முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனுக்குப் பதிலாக உர்ஜித் பட்டேல் நியமிக்கப்பட்டார்.