கிள்ளான்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த கலவரம் குறித்து வருத்தப்படுவதாகவும், அச்சம்பவம் தமக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தருவதாகவும் சுல்தான் ஷாராபூடின் இட்ரீஸ் ஷா, நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 11) தனது 73-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கூறினார்.
மலேசியாவில் உள்ள பல்வேறு இனங்களின் கலாச்சாரங்கள், மதங்கள், மற்றும் அவர்களின் உணர்வுகள் மீது நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்காது என அவர் கூறினார் .
“சிலாங்கூரில் நிகழ்ந்த இச்சம்பவம் என்னை மிகவும் வருந்தச் செய்கிறது. நமது நாட்டிலுள்ள பல்வேறு இனங்களுக்கிடையேயும், மதங்களுக்கிடையேயும் அவநம்பிக்கை மற்றும் குழப்பத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம் நாம் இதுவரையிலும் கட்டியெழுப்பிய எல்லாவற்றையும் அழித்து விடக் கூடாது” என்று அவர் கூறினார்.
சுல்தான் ஷாராபூடின் மக்களை,குறிப்பாக அரசியல்வாதிகளை, இம்மாதிரியான சம்பவங்களின் போது, தங்கள் சுய நலத்திற்காக அதனை இன, மதப் பிரச்சனைகளாக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.