கோலாலம்பூர்: மின் வணிகத்தில் (e-commerce) தனக்கான ஓர் இடத்தினைப் பெற்றிருக்கும் சீன பெருநிறுவனமான அலிபாபா மலேசியாவில் அதன் முதல் சில்லறை விற்பனை அங்காடியைத் திறந்துள்ளது. தென்கிழக்காசியாவிலேயே இதுதான் அதன் முதல் விற்பனை மையமாகத் திகழ்கிறது.
இந்த மையத்தை லுமாகோ செண்டெரியான் பெர்ஹாட் (Lumahgo Sdn.Bhd.), டிமால் வோர்ல்ட் (TMall World) ஆகியவை இணைந்து திறந்துள்ளன. பெரும்பாலும் மரச்சாமான்கள் இந்த மையத்தில் விற்கப்படுகிறது. கோலாலம்பூரிலுள்ள, வீவா ஹோம் அங்காடியின், முதல் மாடியில் இம்மையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
“உள்ளூர் சில்லறை விற்பனையாளர்களுக்கு, புதிய சில்லறை தொழில்நுட்ப அனுபவத்தை வழங்கும் முறையை நாங்கள் உருவாக்கி வருகிறோம்,” என லுமாகோ நிறுவனத்தின் தலைமை நிருவாக அதிகாரி பேபியன் கொங் கூறினார்.
மலேசியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளை, இணையம் வழி வாங்கும் திறனைக் கொண்டிருக்காத வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் விற்பனை செய்ய உதவுகிறோம் “என கோங் மேலும் கூறினார்.
இவ்வாறான புதிய மெய்நிகர் தொழில்நுட்பம் (Virtual Technology) அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதன் வாயிலாக, வாடிக்கையாளர்கள் பொருட்களை இணையம் வழி பார்த்து வாங்கலாம் என்றார் அவர்.