Home நாடு வேதமூர்த்தி அமைச்சராகத் தொடர இந்து தர்ம மாமன்றம் ஆதரவு

வேதமூர்த்தி அமைச்சராகத் தொடர இந்து தர்ம மாமன்றம் ஆதரவு

493
0
SHARE

கோலாலம்பூர் – செனட்டர் பொன். வேதமூர்த்தி பிரதமர் துறை அமைச்சராக தொடர்ந்து நிலைத்திருக்க மலேசிய இந்து தர்ம மாமன்றம் தனது ஆதரவுக் கரத்தை நீட்டியிருக்கிறது.

“மலேசிய இந்துக்களுக்கு கடந்த 36 ஆண்டுகளாக சமயம் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் பிரதிநிதிக்கும் மலேசிய இந்துதர்ம மாமன்றம் ஓர் அரசு சாரா தேசிய இயக்கமாக 1982 இல் நிறுவப்பட்டது. சமீபத்தில் சுபாங் ஜெயா சீபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த கலவரம் நாடறிந்த ஒரு விஷயமாகும். இந்துக் கோயிலுக்குள் வேற்று மதத்தினர் அத்துமீறி நுழைந்ததோடு நம் சகோதர சகோதரிகளை குண்டர்களை கொண்டு தாக்கியிருப்பது மிக மிக கண்டிக்கத்தக்கது, தண்டனைக்குரிய குற்றச்செயல். அதோடுமட்டுமல்லாமல் இக்குற்றத்திற்கு எதிராக முழுமையான புலன் விசாரணை செய்து இதற்கு பின்னணியில் இருந்தவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அரச மலேசிய காவல்துறையிடம் மாமன்றம் மீண்டுமொருமுறை கோரிக்கை வைக்கிறது” என இந்து தர்ம மாமன்றத்தின் தேசியத் தலைவர் இராதாகிருஷ்ணன் அழகுமலை (படம்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

“இந்து ஆலயத்தினுள் அத்துமீறிய குண்டர்க் கும்பலின் காணொளியும் செய்தியும், காட்டு தீபோல் தகவல் ஊடகங்களில் பரவியதால் மறுநாள் ஆயிக்கணக்கான மக்கள் அமைதியாக அங்கு ஒன்று திரண்டது யாவரும் அறிந்ததொன்றே. அங்கு எதிர்பாராதவிதமாக நடந்த சம்பவத்தில் தீயணைப்பு வீரர் சகோதரர் முகமது அடிப் கடுமையான காயங்களுக்கு ஆளானார். பலத்த காயங்களால் சிகிச்சை பயனளிக்காமல் கடந்த 17 டிசம்பர் 2018 அன்று இயற்கை எய்தினார். தனது கடமைகளை நிறைவேற்ற சென்ற ஒரு அப்பாவி நபருக்கு நடந்த இந்த துயரத்தை எண்ணி மாமன்றம் அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து இருந்தது. இந்த விரும்பத்தகாத சம்பவத்தை தொடர்பான ஒரு விரிவான விசாரணையை மேற்கொண்டு, தீர்வு காண அரச மலேசிய காவல்துறையிடம் மாமன்றம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. விசாரணையை விரைவில் முடித்து அதன் விபரங்களை உடனடியாக பொதுமக்களுக்கு தெரிவித்து பல்லின மக்களிடையே நல்லிணக்கத்தை பேணிக்காத்திடல் வேண்டும்” என்றும் இராதாகிருஷ்ணன் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.

சீபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவர அமைதியின்மையையும் முகமது அடிப் மரணத்தையும் சம்பந்தமில்லாமல் தொடர்பு படுத்தி செனட்டர் பொன். வேதமூர்த்தி அவர்களை ஒரு பலிகடாவாக ஆக்கக் கூடாது என்றும் இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

“இந்த சம்பவத்தில், அமைச்சர் வேதமூர்த்தி எந்த ஒரு பக்கமும் சார்பாக இல்லாமல் நடுநிலைப்பாட்டை மேற்கொண்டார் என்பதில் சற்றும் ஐயமில்லை. எனவே, பன்னெடுங்காலமாக கோவில் நிர்வாகத்திற்கும் மேம்பாட்டு நிறுவனத்திற்கும் ஏற்பட்டு வந்துள்ள கோவில் நில பிரச்சனையில் வேதமூர்த்தியை மட்டும் குறைகூறுதல் சற்றும் நியாமற்றது. நாட்டின் ஒன்றுமைக்கும் சமூக நல்லிணக்கத்தை கட்டி காப்பதிலும் வேதமூர்த்தி சிறப்பாக செயலாற்றி வருகிறார் என்பதை மலேசிய மக்கள் நன்கறிவர் என்பதை மலேசிய இந்துதர்ம மாமன்றம் வலியுறுத்த விரும்புகிறது. எனவே, கோவில்களில் நிகழ்ந்த சம்பவங்கள் மற்றும் முகமது அடிப்பின் மரணம் தொடர்பான சம்பவங்கள் ஆகியவற்றை முறையாக புலன் விசாரணை செய்து சட்ட நடவடிக்கைகளை விரைவாகச் செய்யுமாறு மாமன்றம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது” என்றும் இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

மேலும் மக்களுக்கு சிறந்த சேவை தொடர்ந்து வழங்க பிரதமர் துறை அமைச்சராக செனட்டர் பொன்.வேதமூர்த்தி தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்றும், பிரதமர் அவர்கள் வேதமூர்த்தியின் பதவியை நிலைநாட்டுவார் என்றும் மலேசிய இந்துதர்ம மாமன்றம் பெரிதும் எதிர்பார்க்கின்றது.

இந்த இக்கட்டான வேளையில் வேதமூர்த்திக்கு மலேசிய இந்துக்கள் யாவரும் முழு ஆதரவை வழங்குமாறு மாமன்றம் கேட்டுக் கொள்கிறது. இந்நாட்டில் இந்துக்களுக்கு நல்லதொரு விடியலை ஏற்படுத்த முனைத்திருக்கும் வேதமூர்த்தி தம் பதவியில் தொடர்ந்து நீடித்திட மலேசிய இந்துக்கள் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சிட வேண்டுகிறோம் என்றும் இந்து தர்ம மாமன்றத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

Comments