Home நாடு “வேதமூர்த்தியை விலகச் சொல்வது விவேகமற்றது” – இரெ.சு.முத்தையா

“வேதமூர்த்தியை விலகச் சொல்வது விவேகமற்றது” – இரெ.சு.முத்தையா

1241
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அமைச்சர் வேதமூர்த்தி தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என இந்திய சமுதாயத்தில் பரவலாக கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் மலேசிய திராவிடர் கழகத்தின் முன்னாள் தேசியத் தலைவர் இரெ.சு.முத்தையாவும், அதற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

வேதமூர்த்தியைப் பதவி விலகச் சொல்வது விவேகமற்றச் செயலாகும் என்றும் அவர் பதவியில் தொடர வேண்டும், இளைஞர் மன்றம் திருந்தி தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“இளைஞர் சமுதாயத்திற்கு நல்வழி காட்ட வேண்டிய மலேசிய இளைஞர் மன்றம் இன-சமய அடிப்படையிலான அரசியலை உள்ளீடாக வைத்து இயங்கும் ஓர் அமைப்பாக செயல் படுகிறது. இப்படி தந்திர அரசியல் செய்யும் மலேசிய இளைஞர் மன்றம் திருந்த வேண்டும் அல்லது அதன் தலைவர் ஜுஃபிட்ரி ஜோஹா பதவி விலக வேண்டும்” என்றும் முத்தையா அறிக்கை ஒன்றின் வாயிலாகக் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

ஆலயத்தில் நடைபெற்ற கலவரம், அதன் தொடர்பில் காவல் துறை இன்னும் விரைந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டது, கலவரத்தில் தாக்கப்பட்ட தீயணைப்பாளர் மறைய நேர்ந்தது ஆகிய சம்பவங்களுக்கும் அமைச்சர் பொறுப்பிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? என்றும் முத்தையா கேள்வி எழுப்பினார்.

“நாடாளுமன்றத்தில் ‘ஐசெர்ட்’ ஒப்புதலுக்காக எப்போது வேதமூர்த்தி குரல் கொடுத்தாரோ அது முதல் வேதமூர்த்திமீது காழ்ப்பு கொண்டுள்ள ஜுஃபிட்ரி, இப்போது தீயணைப்பு வீரர் அடிப் மரணத்தையும் இதனுடன் தொடர்புபடுத்தி அமைச்சரை விலகும்படி கேட்பது, ஜுஃபிட்ரி மலேசிய இளைஞர் மன்றத்தை வழிநடத்துபவராகத் தெரியவில்லை. மாறாக, இன-சமய அடிப்படையில் செயல்படும் அமைப்பை வழிநடத்துபவராகத் தெரிகிறார். பிரதமர் துன் மகாதீரின் வழிகாட்டுதல் இல்லாமல், பொன்.வேதமமூர்த்தி  ஐசெர்ட் குறித்து சிந்தித்திருப்பாரா என்ற அடிப்படைத் தெளிவுகூட ஜுஃபிட்ரியிடம் இல்லை. சீ ஃபீல்ட் ஆலய விவகாரத்தில் காவல் துறை சுணக்கமாகத்தான் செயல்பட்டுள்ளது என்று தேசிய போலீஸ் படையின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ மூசா ஹசான் அழுத்தமாக சொல்லி இருக்கிறார். அவருக்கு பதில் சொல்ல ஜுஃபிட்ரியால் முடியுமா? நிச்சயமாக அவரால் முடியாது” என்றும் முத்தையா கூறினார்.

எனவே, நாட்டின் உயர்ந்த அமைப்பான தேசிய இளைஞர் மன்றத்திற்கு தலைமை ஏற்றுள்ள ஜுஃபிட்ரி உட்பட அமைச்சர் வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்று கேட்கும் அனைத்துத் தரப்பினரும் தங்களின் பிற்போக்குத் தனத்தை இத்துடன் விட்டுவிட்டு, புதிய மலேசியா மலர்ந்துள்ள நிலையில் சமுதாயத்தில் அமைதியும் பிரதமர் துன் மகாதீர் தலைமையிலான நிர்வாகத்தில் சீர்மையும் நிலவ ஒத்துழைக்கும்படியும் ஒத்துழைக்க இயலாதவர்கள் ஒதுங்கி நிற்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார், மலேசிய மாந்தநேய திராவிடர் கழக ஆலோசகருமான இரெசு. முத்தையா.

தேசிய ஒற்றுமை-சமூக நல அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அமைச்சர் பொறுப்பில் தொடரும்படி வலியுறுத்துவதோடு,  வேதமூர்த்தி, துன் மகாதீர் தலைமையில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு புகழ் நாட்டவும் முத்தையா வாழ்த்து தெரிவித்துள்ளார்.