ஜோகூர் பாரு – பிரதமர் துறை அமைச்சராக செனட்டர் பொன்.வேதமூர்த்தியே தொடர வேண்டும் என்ற கோரிக்கையோடு ஜோகூர் மாநிலத்திலுள்ள சுமார் 40 அரசு சாரா இயக்கங்களைச் சேர்ந்த 200 பிரதிநிதிகள் இணைந்து ஆதரவுக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 23) ஜோகூர்பாருவில் இந்த ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. ஜோகூர் மாநில ஹிண்ட்ராப் அந்த மாநிலத்திலுள்ள பல்வேறு அரசு சாரா இயக்கங்களுடன் இணைந்து இந்த ஆதரவுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல அமைச்சருமான வேதமூர்த்திக்கு ஆதரவாக சில தீர்மானங்களும் இந்த ஆதரவுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
அந்தத் தீர்மானங்களில் சில பின்வருமாறு:
- பொன்.வேதமூர்த்தி தொடர்ந்து அமைச்சராக நீடிக்க வேண்டும்
- சீபீல்ட் ஆலய விவகாரத்தில் காவல் துறை முழுமையான, விரிவான விசாரணைகளை மேற்கொண்டு குற்றம் இழைத்தவர்கள் மீது வழக்குகள் கொண்டு வரப்பட வேண்டும்.
- சீபீல்ட் கலவரத்தில் எதிர்பாராத விதமாக உயிரிழந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் காசிம் மரணத்திற்குக் காரணமானவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
- இனத்தையும், மதத்தையும் பயன்படுத்தி மலேசியர்களிடையே பிரிவினையைத் தோற்றுவிக்கும் தீவிரவாதக் கும்பல்களின் நெருக்குதல்களுக்கு அரசாங்கம் பணிந்து விடக் கூடாது.
- பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இன விரோதத்தைத் தீமூட்டி அறிக்கைகள் விடும் சில குழுக்களின் மீது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.