கோலாலம்பூர் – புத்தாண்டு பிறந்திருக்கும் வேளையில், நம்பிக்கைக் கூட்டணி பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தருணத்தில், பிரதமர் துன் மகாதீர் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே தனது பதவியில் நீடிப்பாரா அல்லது முழு 5 ஆண்டுகள் தவணைக்கும் அவரே பிரதமராக இருப்பாரா என்ற சர்ச்சைகள் எழுந்துள்ளன.
நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைச் செயலாளரான சைபுடின் அப்துல்லா வெளியிட்ட அறிக்கையில் மகாதீருக்குப் பிறகு அன்வார்தான் பிரதமர் என்பது மட்டுமே முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், எத்தனை ஆண்டுகளில் மகாதீர் பிரதமர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டதில்லை என்றும் அதிரடியாக ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார்.
அன்வாருக்கு பதவியை விட்டுக் கொடுப்பேன் என மகாதீர் தொடர்ந்து கூறிவரும் வேளையில், பலரும் இது குறித்து பலவிதமான சர்ச்சைகளை எழுப்பி வருகின்றனர்.
அன்வாரின் முன்னாள் செயலாளரும், முன்னாள் செனட்டருமான முகமட் நோர் எசாம் மகாதீர் முழு 5 ஆண்டுகள் தவணைக்கு பிரதமராக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமட், மகாதீர் தனது வாக்குறுதிக்கு ஏற்ப பொதுத் தேர்தலில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் பிரதமர் பொறுப்பை அன்வார் வசம் ஒப்படைப்பார் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
பதவியேற்று ஆறுமாதங்கள் கடந்து வெற்றிகரமாக 2019-ஆம் ஆண்டில் நம்பிக்கைக் கூட்டணி காலடி எடுத்து வைக்கும் இந்தத் தருணத்தில் இதுபோன்ற விவாதங்கள், சர்ச்சைகள் நம்பிக்கைக் கூட்டணியை பலவீனப்படுத்துவதாகவும், அதன் நம்பகத் தன்மையை இழக்கச் செய்வதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அன்வாருக்கும், மகாதீருக்கும் இடையில் பிரச்சனைகள் மூட்டி அதில் குளிர்காய சில அரசியல் தலைவர்கள் முயற்சி செய்வதன் விளைவுதான் இந்த சர்ச்சைகள் என்ற ஆரூடங்களும் கூறப்படுகின்றன.