கோலாலம்பூர்: ஜனவரி 1-ஆம் தேதி முதல் உணவகங்களில் புகைப் பிடிக்க அனுமதி இல்லை எனும் அரசாங்கத்தின் முடிவிற்கு பல்வேறான கருத்துகள் பகிரப்பட்டு வந்தாலும், அரசாங்கம் தங்களின் முடிவிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.
போதுமான அளவிற்கு அவகாசம் தந்து விட்டதாகவும், முதல் ஆறுமாதங்களுக்கு, எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் புகைப் பிடிப்பவர்கள் மீது செயல்படுத்தப்படாது எனவும் அவர் கூறினார். ஆயினும், அவ்வாறு சட்டத்தை மீறிச் செயல் படுபவர்களுக்குக் கல்வி முறையிலான அணுகுமுறையை சுகாதார அமைச்சகம் செயல்படுத்தும் என அவர் கூறினார்.
தண்டனை நடவடிக்கைகள், இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் இருந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
கடந்த அக்டோபர் மாதத்தில், புகைபிடித்தல் எல்லா உணவகங்களிலும் அனுமதிக்கப்படமாட்டாது என்று அமைச்சு அறிவித்தது. அவ்வாறு, தடை செய்யப்பட்ட பகுதிகளில் புகைப் பிடிப்பவர்களுக்கு 10,000 ரிங்கிட் வரையிலும் அபராதமும், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
கடை உரிமையாளர்கள் பொதுமக்களை தங்களின் உணவகங்களில் புகைப் பிடிக்க அனுமதித்தால் அவர்களுக்கு 2,500 ரிங்கிட் வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.
2018-ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில், புகைப் பிடிப்பதற்கான முழுமையான அமலாக்கத்திற்காக பல்வேறு உணவக உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது என சுல்கிப்ளி கூறினார்.
சிகரெட்டுகள் தவிர்த்து, இந்தத் தடுப்புச் சட்டம், மின் சிகரெட் மற்றும் ஷிசாஸ் எனப்படும் குழாய் மூலம் புகைப்பிடிக்கும் பழக்கங்களையும், அவை நிகோடினைக் கொண்டிருக்குமானால் அவற்றிற்கும் தடை விதிக்கப்படும் என அமைச்சு தெரிவித்தது.