திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள காசாரகோட் (Kasaragod) தொடங்கி திருவனந்தபுரம் (Thiruvanthapuram) வரையிலும் இலட்சக் கணக்கான பெண்கள், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒன்று சேர்ந்து ‘வூமன்ஸ் வோல்’ (Women’s Wall) எனும் எதிர்ப்பு பேரணியில் கலந்துக் கொண்டனர்.
கேரள மாநில அரசாங்கம், இடதுசாரி ஜனநாயக முன்னணி (Left Democratic Front), ஏற்பாடு செய்த இந்த நீண்ட பெண்கள் எதிர்ப்புச் சுவர், நேற்று மாலை 4 மணியளவில் தொடங்கப்பட்டது. அனைத்து வயது பெண்களுக்கும் சபரிமலை ஆலயத்திற்குச் செல்ல அனுமதி உண்டு என உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
அதனைத் தொடர்ந்து கடந்த வாரங்களில் கோயிலுக்கு வந்த பெண்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் ஒரு சில கூட்டத்தினர் முற்பட்டனர். அந்த பெண்களின், பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல் துறையினர், அவர்களைக் கோயிலுக்குள் செல்ல விடாமல் திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது .
கேரளாவை மீண்டும் இருண்ட காலத்திற்குள் அழைத்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றும், பெண்களுக்கு சம உரிமை உண்டு என்றும் கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறியிருந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டன.