கோத்தா பாரு: கிளந்தான் கடற்பகுதியில் வாழும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு, கிளந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக் கேட்டுக் கொண்டது. சிவப்பு நிறக் கொடி எச்சரிக்கையை விடுத்ததுடன், பெரிய அலைகளும், கடல் கொந்தளிப்பும் ஏற்படும் அபாயம் உள்ளதால், முன்னெச்சரிக்கையாக மக்கள் கடற்பகுதிகளுக்குச் செல்லாது இருப்பது நல்லது என அத்துறை நினைவூட்டியது.
வெப்பமண்டல சூறாவளி ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதால், யாரும் கடலில் நீந்தவேண்டாம் என்று அதன் இயக்குனர் நசிலி மஹ்முத் கூறினார்.
பெங்காலான் குபோர், பச்சோக், பாசீர் புத்தே மற்றும் சபாக் கடற்கரைப் பகுதிகளை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக் கண்காணித்து வருவதாகவும், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
முன்னதாக, மலேசிய வானிலை திணைக்களம் (இலாகா) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 2-ஆம் முதல் 5-ஆம் தேதி வரையிலும், காற்றின் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 50 கி.மீ முதல் 60 கி.மீ வரையிலும் உயர்ந்திருக்கும் எனவும், கிளந்தான், திரங்கானு, மற்றும் பகாங் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் 4.5 மீட்டர்வரையிலும் அலைகள் எழலாம் எனவும் குறிப்பிட்டிருந்தது.
வலுவான காற்றும், கடல் கொந்தளிப்பும் மீன்பிடி, கடற்கரை நடவடிக்கைகள் மற்றும் படகு சேவைகள் ஆகியவற்றுக்கு ஆபத்தானவை.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கண்காணிப்பின் அடிப்படையில், அந்தந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிவப்பு நிறக் கொடி எச்சரிக்கையை பொதுமக்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர் என்றார் அவர்.