சிங்கப்பூர்: இங்கு புக்கிட் பிரவுனில் (Bukit Brown) உள்ள சுமார் 4,000 கல்லறைகளை அகற்றி எட்டு வழி நெடுஞ்சாலையை அமைக்கப் போவதாக சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்ததை ஒட்டி மக்களிடமிருந்து பெரும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணமாக உள்ளன.
அழகுபடுத்தப்பட்ட தோட்டங்கள் மற்றும் உயர்ந்து படர்ந்தக் காடுகளின் அரிய இணைப்புகளைக் கொண்டிருக்கும் இப்பகுதி, சுமார் 100,000 கல்லறைகளைக் கொண்டிருக்கிறது. இது ஜப்பானிய ஆக்கிரமிப்பு மற்றும் இரண்டாம் உலகப் போரின் முக்கியமான நினைவு இடமாகவும் கருதப்படுகிறது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதி மூடப்பட்டிருந்தாலும், இறந்தவர்களின் சந்ததியினர் தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை இன்னும் பார்வையிட்டு வருவதாக தன்னார்வலர் டேரேன் கோ கூறினார். 2030-ஆம் ஆண்டுக்குள் புக்கிட் பிரவுன் கல்லறைகள், வீட்டு கட்டுமானப் பணிகளுக்காக முழுமையாக தகர்க்கப்படும் என அவர் கூறினார்.
“இது ஒரு வாழும் அருங்காட்சியகம். நிறைய வரலாற்று மற்றும் பாரம்பரியத்தை நாம் இழந்து விட்டோம். ஆகவே, புக்கிட் பிரவுன் கல்லறையைக் காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கிறோம், ” என்றும் டேரன் கோ கூறினார்.
5.6 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் சிங்கப்பூரில், 2030-க்குள் இந்த எண்ணிக்கை 6.9 மில்லியனாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் குடிக்கொள்ள இட நெருக்கடி கொண்ட நாடாக சிங்கப்பூர் உருமாறிக் கொண்டிருக்கிறது.
தீவு நாடாகிய, சிங்கப்பூர், நீண்ட காலமாக கடலில் மண் நிரப்பி, நிலங்களாக உருமாற்றிக் கொண்டிருக்கிறது.வீடுகள் மற்றும் நெடுஞ்சாலைகள் கட்டுமானத்திற்காக பல கல்லறைகள் காலி செய்யப்பட்டுள்ளன.