மலாக்கா – கல்வி தானம் கண் தானத்திற்கு ஒத்தது என்பார்கள். இப்புத்தாண்டில் மலாக்கா குபு தமிழ்ப் பள்ளி கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பயிற்சி புத்தகங்களை கல்வி தானம் நோக்கில் அன்பளிப்பாகப் பெற்றது.
மலாக்கா மாநில கோத்தா மலாக்கா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கூ போய் தியோங்,
முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கு மேற்கோள் மற்றும் பயிற்சி புத்தகங்களை கடந்த வெள்ளிக்கிழமை ஜனவரி 4-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அன்பளிப்பாக வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய துணைத்தலைமை ஆசிரியர் செல்வராஜு, வழங்கப்பட்ட யாழ் நிறுவன புத்தகங்கள் தரமானதாக இருப்பதாகப் பாராட்டினார்.
அறிவியல் புத்தகத்தில் கார்டூன் ஓவியங்களை வரைந்த ஓவியரும், யாழ் புத்தகங்களை நாடு தழுவிய அளவில் விநியோகித்து வரும் மாயா புத்தக நிலைய விநியோகிப்புப் பிரிவின் பிரதிநிதியுமான தீர்த்த பாதா உரையாற்றுகையில் தமிழ்ப் பள்ளிகளின் தரமானக் கல்வியை மையப்படுத்தி வகுப்பறைகளின் போதனா தேவைகளுக்கு ஏற்ப புத்தகங்களை வெளியீடு செய்வதில் யாழ் பதிப்பகம் மிக கவனமாகவும் அக்கறையாகவும் செயல்பட்டுவருவதாக தமது அறிமுக உரையில் தெரிவித்தார். தமிழ்ப் பள்ளிகளுக்குத் தரமான புத்தகங்களைக் கொண்டு சேர்ப்பதில் இதுபோன்ற நூல் அன்பளிப்பு நிகழ்வுகளால் சாத்தியப்படுகிறது. நூல் அன்பளிப்பு விழாவுக்கு யாழ் புத்தகங்களூக்குக் கிடைத்த இடம் அதன் தரத்திற்குக் கிடைத்த அங்கீகாரமாகும். மலாக்கா மாநிலத்தில் இந்த அங்கீகாரத்தைப் பெறும் வாய்ப்பைத் தந்த கூவுக்கு நன்றி கூறினார் யாழ் ஒருங்கிணைப்பாளர் சரவண தீர்த்தா.
மலேசியாவின் புதிய அரசாங்கம் மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் தந்திருப்பதால் இவ்வாண்டு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் கல்வி அமைச்சுக்கு 19 விழுக்காடு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சிறப்புரை ஆற்றிய கூ தெரிவித்தார். மேலும் பள்ளியின் கல்வித் தேவைகளையும் (யூ.பி.எஸ்.ஆர் முகாம்), துணைத் தலைமை ஆசிரியர் பட்டியலிட்ட இதரத் தேவைகளையும் செய்து கொடுப்பதாகக் கூ தமதுரையில் கூறினார்.
மாணவர்களுக்குப் புத்தகங்களையும், சேர்ப்பிக்க இருந்த புத்தகப் பைகளையும் எடுத்து வழங்கிய கூவுக்குப் பள்ளி சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் தலைமை ஆசிரியர் மல்லிகா.
தலைமை ஆசிரியருக்கும் துணைத்தலைமை ஆசிரியருக்கும் யாழ் தென்மண்டலக் கல்விக் குழுவின் பொறுப்பாளர் இரா.சரவண தீர்த்தா, வல்லினம் 100 இலக்கியக் களஞ்சியம் புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார்.
மாண்புமிகு கூவின் ஆதரவாளரும் தமிழ் நேசருமான சு.கணேசன், என்.கணேஸ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பிரமுகர்களாகக் கலந்து கொண்டனர்.
மலாக்கா மாநிலத்தில் தமிழ்ப் பள்ளிக்கு புத்தகம் அன்பளிப்பு செய்து தமிழ்ப் பள்ளி மாணவர்களின் கல்விக்குப் பேருதவியாக நின்ற கூவுக்கும் தமிழ்ப் பள்ளி ஆதரவாளர்களுக்கும் யாழ் தென்மண்டலக் கல்விக் குழுவின் சார்பில் பாராட்டுக்களும், வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்ளப்பட்டதோடு, நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்வதில் முனைப்புக் காட்டிய அனைத்து ஆசிரியர் சமூகத்திற்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
தங்களின் வட்டாரத்திலுள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு இவ்வாறு கல்வி தானம் செய்ய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள :
இரா.சரவண தீர்த்தா 019-9795060
-செய்தி தொகுப்பு நிர்மாயா ராதா