சுல்தான் இப்ராகிம் பல வாரங்களுக்கு முன்னரே, டாக்டர் மகாதீரை அவரைச் சந்திக்குமாறு பணித்திருந்ததாக, பிரதமர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர், மலேசியா கினி இணையச் செய்தி தளத்திற்குத் தெரிவித்தார் .
குறிப்பிட்ட சில விவகாரங்களுக்காக பிரதமர் நாளை சுல்தான் இப்ராகிமை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் அடுத்த மாமன்னராக சுல்தான் இப்ராகிம் பதவி ஏற்பார் என்ற வதந்திகள் சமூக ஊடங்களில் பரவலாகப் பேசப்பட்டது. ஆயினும், சுழற்சி முறையில் சுல்தான் முகமட்டிற்கு பிறகு, பகாங் மாநில சுல்தான் அமகட் ஷாவிற்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தன.
இதற்கிடையில், தெங்கு அப்துல்லா சுல்தான் அகமட் ஷா, பகாங் மாநிலத்தின் அடுத்த சுல்தானாக பதவியேற்க இவ்வாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பகாங் மாநில அரசு தரப்புக் கூறியுள்ளது.
இதன் வாயிலாக, ஒன்பது மலாய் ஆட்சியாளர்களின் சுழற்சியின் அடிப்படையில், அவர் நாட்டின் 16-வது மாமன்னராக பதவியேற்கும் வாய்ப்பும் உள்ளதாகத் தெரிகிறது.
ஜனவரி 24-ஆம் தேதி புதிய மாமன்னரை மலாய் ஆட்சியாளர்கள் கூட்டம் நடத்தி, தேர்ந்தெடுப்பார்கள் என அரண்மனை முத்திரை காப்பாளர் டான்ஶ்ரீ சேட் டேனியல் சேட் அகமட் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து, ஜனவரி 31-ஆம் தேதி நாட்டின் 16-வது மாமன்னரும், துணை மாமன்னரும் பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது.