Home இந்தியா இந்தி தெரியாதக் காரணத்தால், தமிழ் இளைஞரை அவமதித்த அதிகாரி!

இந்தி தெரியாதக் காரணத்தால், தமிழ் இளைஞரை அவமதித்த அதிகாரி!

1574
0
SHARE
Ad

மும்பை: அமெரிக்காவில் வேதியியல் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்ற, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஆப்ராஹாம் சாமுவேல் என்பவரை கடந்த செவ்வாய்கிழமை, மும்பை சத்ரபதி விமான நிலையத்தில், குடியுரிமை அதிகாரி ஒருவர், இந்தி பேசத் தெரியாததால் அவரை தமிழ் நாட்டிற்கே சென்று விடுமாறு கூறி அவமானப்படுத்தியுள்ளார்.

இது குறித்து செய்தித் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்த நிலையில், தற்போது இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.    

#TamilSchoolmychoice

தனக்கு நேர்ந்த இந்த அவமானத்தை, ஆப்ராஹாம், உடனடியாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றினார். தமிழும், ஆங்கிலமும் மட்டும் தெரிந்திருக்கிற நிலையில், மும்பை விமான நிலையத்தின் குடியுரிமை அதிகாரி ஒருவர், “உனக்கு இந்தி தெரியாதா அப்படியென்றால் தமிழ்நாட்டுக்குப் போஎன்று ஆப்ராஹாமைப் பார்த்துக் கூறியதாக அவர் பதிவிட்டிருந்தார்.

அப்பதிவில் அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மற்றும், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரை டுவிட்டரில் இணைத்திருந்தார்.

அவரது, இப்பதிவு, பெருமளவில் சமூக ஊடகத்தில் விவாதத்திற்கு உள்ளானது. இதனை அடுத்து, ஆபிரஹாம் சாமுவேலை அவமானப்படுத்திய அவ்வதிகாரி பணியிலிருந்து நீக்கப் பட்டார்.

தாம் இந்தியனாக இருப்பதில் பெருமைப்படுவதாகவும், அதிலும் தமிழனாக இருப்பதில் இன்னும் பெருமைப்படுவதாகவும் கூறிய ஆப்ராஹாம், குறிப்பிட்ட சிலருக்கு இவ்விசயத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அவர்கள் உண்மையான இந்தியர்களே அல்ல என மேலும் பதிவிட்டிருந்தார்.