ஜோர்ஜ் டவுன்: ஜனவரி 21-ஆம் தேதி இந்துக்கள் கொண்டாட இருக்கும் தைப்பூசத் திருநாளின் போது, அன்னதானம் வழங்க இருப்போர், பொதுமக்கள் உணவுகளை வீணடிக்காது இருப்பதற்கு அவர்களுக்கு தேவையான அளவு உணவளிப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்க கல்வி அதிகாரி என்.வி. சுப்பராவ் கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் இம்மாதிரியான திருவிழாக் காலங்களில், எஞ்சிய உணவுகள் குவியலாக ஆங்காங்கே குவிக்கப்படுவதாகவும், இவ்வருடமும் அச்சூழல் நிகழும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார். நாடு முழுவதும் இவ்வருட தைப்பூசத் திருவிழாவில் குறைந்தபட்சம் 3,000 டன் உணவுகள் வீணாகும் என கணக்கிடப்பட்டிருப்பதாக சுப்பராவ் கூறினார்.
பொதுவாக மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படும் இத்திருவிழா காலத்தில், பினாங்கில் மட்டும் இவ்வருடம் குறைந்தபட்சம் 120 தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.