புத்ராஜெயா: ஊழல் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஈடுபட்ட நபர்கள், சமச்சீராக நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்கள் எனத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் உத்தரவாதம் வழங்கினார்.
ஆளும் அரசாங்கத்தின் உத்தரவுகளை அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகம் ஏற்காது எனவும், இவ்வாறு செயல்பட்டு வந்த தேசிய முன்னணி அரசாங்கத்தை மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் தண்டித்ததையும் டோமி நினைவுக் கூர்ந்தார்.
சட்ட அமலாக்க விவகாரங்களில் பாரபட்சமாக செயல்பட்டதால் மக்களுக்கு தேசிய சட்ட நிறுவனங்களின் மீது நம்பிக்கைப் போய் விட்டதாக அவர் தெளிவுப்படுத்தினார்.
1988-ஆம் ஆண்டு நடந்த நீதித்துறை நெருக்கடியைச் சுட்டிக் காட்டிப் பேசிய டோமி, கடந்த 30 ஆண்டுகளாக நீதிதுறையில் சம்பந்தப்பட்ட அரசாங்கம் தலையிட்டதன் காரணமாக நாட்டின் நீதித்துறை மாசுபட்டு விட்டதாகக் குறிப்பிட்டார்.