
சிங்கப்பூர்: தமிழ் இசை, தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழி ஆகியவை மனித உணர்வுகள், நெறிமுறைகளுடன் பிணைக்கப்பட்டவை. அறிஞர்களின் கூற்றுப்படி, தமிழ் இசை 2,000 ஆண்டுகள் பழமையானது என்றும், இந்திய நாட்டின் இசை வடிவத்தின் முன்னோடி எனவும் கருதப்படுகிறது.
சிங்கப்பூரில், தனிநபர்களால் பல சிறிய அளவிலான இசை மற்றும் நடனப் பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆயினும், அவை பெரிய அளவில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள இயலவில்லை.
இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக, தமிழ் இசையையும் நடனத்தையும் ஊக்குவிப்பதற்காக ‘கலாமஞ்ஜரி‘ எனும் அமைப்பை, சௌந்தர்யா நாயகி வைரவன் மற்றும் ஸ்வர்னா கல்யாண் அமைத்துள்ளனர். இவர்கள் இருவரும் பாடகர்களாக தங்கள் கலைப் பயணத்தைத் தொடங்கி, அரங்க நிகழ்ச்சிகளை நடத்துவதில் அனுபவம் வாய்ந்தவர்கள்.
தற்போதைக்கு, இவ்வமைப்பின் மூலமாக, பல்வேறு தமிழ் இசையமைப்பாளர்களின் படைப்புகளைக் கொண்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், தமிழ் இசை போட்டிகள் மற்றும் பட்டறைகளை நடத்தியும் வருகின்றனர்.
பல்வேறு இன மக்களைக் கொண்ட சிங்கப்பூரில், இனக்குழுக்களுக்கு இடையிலான இணக்கம் வலுவாக வலியுறுத்தப்படுவதால், இந்தியர் அல்லாதவர்களையும் சிலநிகழ்ச்சிகளில்பங்கேற்கமுயற்சித்து வருவதாகவும் சௌந்தர்யா கூறினார். இவ்வாறான செயல்முறையினால், மற்ற இனங்களின் மத்தியில் தமிழ் இசையின் மதிப்பை பரப்பமுடியும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
2018-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி புகழ்பெற்ற தமிழ் இலக்கியப் படைப்பான ‘திருக்குறள்‘ இசை ஆல்பத்தை இவர்கள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.