Home இந்தியா உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது

1079
0
SHARE
Ad

புதுடில்லி – நடைபெறவிருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலில் முக்கிய மாநிலமாக – போட்டிக் களமாக – திகழப் போவது உத்தரப் பிரதேச மாநிலம்தான். 80 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தின் பெரும்பான்மை நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் கூடுதலாக இருக்கும் என்பது இந்திய அரசியலில் எழுதப்படாத விதி.

2017-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அகிலேஷ் யாதவ் கட்சியான சமஜ்வாடியும் காங்கிரசும் கூட்டணி கண்டன. எனினும் அந்த சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் தோல்வியடைய பாஜகவே மீண்டும் அங்கு வெற்றி பெற்று மாநில அரசாங்கத்தை அமைத்தது.

எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தலில் காங்கிரசைக் கைகழுவிட்டு சமஜ்வாடி கட்சி, மாயாவதி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் வழங்கும் விதமாக அகிலேஷ் யாதவ்வும், உத்தரப் பிரதேசத்தின் மற்றொரு அரசியல் ஆளுமையான மாயாவதியும் இணைந்து கூட்டணி அமைப்பதாக அறிவித்துள்ளனர். இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

எனினும், காங்கிரசுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியிலும் சோனியா காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியிலும் அகிலேஷ்-மாயாவதி கூட்டணி போட்டியிடுவதில்லை என முடிவு செய்திருக்கிறது.

அகிலேஷ்-மாயாவதி கூட்டணி அமைந்து விட்டதால், ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சி உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ், பாஜக கூட்டணி, அகிலேஷ்-மாயாவதி என மூன்று வலுவான அரசியல் கூட்டணிகள் மோதும் சுவாரசியமான, பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

-செல்லியல் தொகுப்பு