Home Photo News பத்துமலை தைப்பூசம் களை கட்டியது (படக் காட்சிகள்)

பத்துமலை தைப்பூசம் களை கட்டியது (படக் காட்சிகள்)

1629
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஆண்டுதோறும் இந்துப் பெருமக்கள் பெருமளவில் திரளும் தைப்பூசத் திருநாள் கொண்டாட்டங்கள் பத்துமலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் முன்பிருந்தே தொடங்கி விட்டன.

தைப்பூசத் திருநாளின் போது கூட்ட நெரிசலும், காவடிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என்பதால், பலர் இப்போதே காவடிகள், பால்குடங்கள் எடுத்து வரத் தொடங்கிவிட்டனர்.

பத்துமலை அடிவாரத்தில் இருக்கும் ஆலயங்கள்

இன்னொரு பக்கத்தில் தைப்பூசத் திருவிழாவுக்கான கடைகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. அவல், பொரிகடலை, இனிப்புகள், பலகாரங்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகள் இயங்கத் தொடங்கி விட்டன.

#TamilSchoolmychoice

நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 18) செல்லியல் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்கள் தைப்பூசத் திருநாள் ஏற்பாடுகளைக் காண பத்துமலைக்கு வந்தபோது, அங்கு தைப்பூசம் களை கட்டி விட்டதை நன்கு உணரவும் பார்க்கவும் முடிந்தது.

பத்துமலை அடிவாரத்தில் பக்தர்களையும், சுற்றுப் பயணிகளையும் ஒருசேர ஈர்க்கும் புறாக்களின் அணிவகுப்பு

பத்துமலை நோக்கிச் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல்கள் அதிகரித்திருப்பதோடு, பத்துமலை நோக்கிச் செல்லும் சாலைகளின் இரு பக்கங்களிலும் நூற்றுக்கணக்கான காவல் துறையினர், மற்றும் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் வரிசையாகப் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

பத்துமலை நோக்கிச் செல்லும் சாலைகளின் இருமருங்கிலும் பக்தர்கள் வரிசையாக கட்டுப்பாடின்றி, மற்றவர்களுக்கு இடையூறாக இருக்குமே என்ற அக்கறையின்றியும், தாறுமாறாகக் கார்களை நிறுத்திச் சென்றுள்ளதாலே அந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் உணர முடிந்தது. எனவே, பத்துமலை செல்லும் பக்தர்கள் கார்களை முறையான கார் நிறுத்தும் மையங்களில் நிறுத்தி விட்டுச் சென்றாலே பாதி போக்குவரத்து நெரிசல் குறைந்து விடும் என்பதையும், அங்கு வரும் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்பதையும் உணர வேண்டும்.

வண்ணமயமான பத்துமலைப் படிக்கட்டுகளில் கூட்டம்

வெளிநாட்டுப் பயணிகளும் சுற்றுலா பேருந்துகளில் கூட்டம் கூட்டமாக வந்திருப்பதையும் காண முடிந்தது.

அண்மையில் நடந்து முடிந்த கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து நடைபெறும் முதல் தைப்பூசத் திருவிழா என்பதால் பத்துமலை வளாகம் எங்கும் ஒரே வண்ணமயமாக – புத்தம் புதியதாகக் காட்சியளிக்கிறது.

பத்துமலை வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 18) எடுக்கப்பட்ட தைப்பூசத் திருவிழாக் காட்சிகளை இங்கே காணலாம்:

பத்துமலை மேல்குகைக்கு செல்லும் வழியில் இடது புறம் உருவாக்கப்பட்டிருக்கும் நீர்வீழ்ச்சி கண்களுக்கும் குளிர்ச்சி – நல்ல இயற்கைச் சூழல்
பத்துமலை படிக்கட்டுகளில் குரங்குகள் செய்யும் தொந்தரவுகளும், ஏற்படுத்தும் அச்சமும், அவற்றின் குறும்புகளும் பத்துமலையின் தனித்துவம்
தாவித் தாவிச் சென்றாலும் தாயின் மடியை இறுகப் பற்றிக் கொண்டு தொங்கும் குட்டி – விலங்குகளின் பாசக் காட்சி
குகையின் உட்புறத்தில் முற்றிலும் புதியதாக எழுப்பப்பட்டிருக்கும் ஆலயம்
பத்துமலை மேல்குகையிலிருந்து இறங்கும் வழியில் பிரம்மாண்டமான முருகன் சிலையும் பத்துமலை அடிவாரத்தின் தோற்றமும்

-செல்லியல் தொகுப்பு