Home இந்தியா ஜாகிர் நாயக்கின் 16 கோடி ரூபாய் சொத்துகள் இந்தியாவில் முடக்கம்

ஜாகிர் நாயக்கின் 16 கோடி ரூபாய் சொத்துகள் இந்தியாவில் முடக்கம்

1183
0
SHARE
Ad

புதுடில்லி – சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை இந்தியாவில் முடக்கம் செய்து இந்திய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் நாயக் மீது இந்திய அரசாங்கம் பல வழக்குகளைத் தொடுத்திருப்பதோடு, மலேசியாவில் தங்கி இருக்கும் இவரை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென மலேசிய அரசாங்கத்திடம் கோரிக்கையும் விடுத்து வருகிறது.

ஜாகிர் நாயக், தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறும், இரத்து செய்யப்பட்ட தனது அனைத்துலகக் கடப்பிதழை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்றும்  மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விசாரணை நடந்து வருகிறது.

#TamilSchoolmychoice

இந்த நிலையில் தற்போது மும்பை மற்றும் புனேவில் ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான ரூ.16 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி வைத்துள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்திருக்கிறது.

இது தவிர பணமோசடி வழக்கில் ஜாகிர் நாயக்கின் சொத்துகளை ஏற்கனவே 2 முறை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

இவ்வாறு இதுவரை மொத்தம் ரூ.50 கோடியே 49 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அடையாளம் தெரியாத நன்கொடையாளர்களிடமிருந்து ஜாகிர் நாயக்கின் வங்கிக் கணக்குகளுக்கு இதுவரையில் சுமார் 49.20 கோடி ரூபாய் வந்திருப்பதாகவும் இந்திய அமலாக்கத் துறை குற்றஞ் சாட்டியுள்ளது.