Home வணிகம்/தொழில் நுட்பம் 5ஜி தொழில்நுட்பம் : உலகமெங்கும் மிகப் பெரும் தாக்கம்

5ஜி தொழில்நுட்பம் : உலகமெங்கும் மிகப் பெரும் தாக்கம்

2175
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாம் பயன்படுத்தும் செல்பேசிகள், கையடக்கக் கருவிகள், தொலைத் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் தற்போது 4-ஜி என்ற தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதற்கு அடுத்ததாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் 5-ஜி (5G) தொழில்நுட்பம் காட்டப் போகும் தொலைத் தொடர்பு வித்தைகள் என்ன – அதனால் மக்களுக்குக் கிடைக்கப் போகும் பயன்கள் என்ன – உலகமெங்கும் நிகழப்போகும் தாக்கங்கள் என்ன என்பது குறித்துத் தெரிந்து கொள்ள தொழில்நுட்ப ஆர்வலர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

சி.பி.குர்னானி – டெக் மஹிந்திரா தலைமைச் செயல் அதிகாரி

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக டெக் மகிந்திராவின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சி.பி.குர்னானி 5ஜி ஏற்படுத்தப் போகும் உலக மாற்றங்கள் குறித்து, சிஎன்என் ஊடகத்திற்கு கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • 5ஜி புரட்சி தொடங்கி விட்டது. இதன் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும் செல்பேசிகள், தொலைக்காட்சிகள், கண்காணிப்பு பாதுகாப்பு அம்சங்கள், ஒலிபெருக்கிகள் இவற்றின் தொழில் நுட்ப மாற்றங்கள் மேலும் அதிகரிக்கவே செய்யும்.
  • மனிதகுல தொழில்நுட்ப வரலாற்றில் 5ஜி தொழில்நுட்பம் செல்பேசிகளின் வழியான அகண்ட அலைவரிசை சேவைகளையும் தாண்டி, விவேக நகர்கள் நிர்மாணிப்பு (ஸ்மார்ட் சிட்டி), இயந்திர மனிதர்கள், தானே இயங்கும் கார்கள், உடல் நல மருத்துவம், விவசாயம், கல்வி என பல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.
  • 5ஜி தொழில் நுட்பத்தின் மூலம் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கும் அப்பால் உள்ள நோயாளிகள் மீது மருத்துவர்கள் இயந்திர மனிதர்களைக் கொண்டு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப் போகும் அதிசயமும் நிகழப் போகிறது. வியாதிகளைக் கண்காணிப்பது, பரிசோதிப்பது, மருத்துவ பராமரிப்பு ஆகிய அம்சங்களிலும் பெரும் மாற்றங்கள் காத்திருக்கின்றன.
  • தற்போதுள்ள அகண்ட அலைவரிசைகளின் வழி ஒரு தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தின் வழி தகவல்கள் கடந்து போக 100 மில்லிசெகண்ட் தேவைப்படுகிறது. ஆனால் 5ஜி தொழில் நுட்பத்தின் வழி இந்த விரைவு 1 மில்லிசெகண்ட்டாகக் குறைக்கப்படுகிறது.
  • ஆனால் 5ஜி தொழில்நுட்பம் முழுமையாக செயல்வடிவம் பெற பில்லியன் கணக்கான பணம் முதலீடு தேவைப்படும். கம்பிஇழை (fibre-optic) வடங்கள், தரையில் நிர்மாணிக்கப்படும் மையங்கள், சமிக்ஞைகளை உள்வாங்கிப் பரப்பும் கருவிகள் (antennas), ஆகியவை மேலும் விரிவான முறையில் நிர்மாணிக்கப்பட்டு, அத்தகைய வசதிகள் விரிவாக்கப்பட்ட பின்னரே 5ஜி தொழில் நுட்பம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்.

இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம். கேட்கக் கேட்க சுவாரசியமாக இருக்கிறதல்லவா?

#TamilSchoolmychoice

ஆனால் காத்திருக்க வேண்டும்! 2020-ஆம் ஆண்டுதான், 5ஜி தொழில்நுட்பத்திற்கான அமுலாக்கத்திற்கான ஆண்டு எனப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதுவரை காத்திருப்போம்!

-செல்லியல் தொகுப்பு