Home Photo News பத்துமலை தைப்பூசத்தில் நஜிப்!

பத்துமலை தைப்பூசத்தில் நஜிப்!

1697
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிரதமராக இருந்த காலத்தில் ஆண்டுதோறும் தவறாது பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டு வந்தவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக். கடந்த மே 9 பொதுத் தேர்தலில் மக்கள் செல்வாக்கை இழந்ததால் தோல்வியடைந்து – பிரதமர் பதவியையும் இழந்து, தற்போது வரிசையாக நீதிமன்ற வழக்குகள் அணிவகுத்து நிற்கும் நிலையில், நேற்று மாலை பத்துமலை தைப்பூசத் திருவிழாவுக்கு வருகை தந்து அங்கிருந்த பொதுமக்களிடையே அதிர்வை ஏற்படுத்தினார் நஜிப்.

பத்துமலை வளாகத்தை வந்தடைந்த அவரை ஆலய நிர்வாகத்தினரும், மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும் வரவேற்றனர். பத்துமலை வளாகத்தைச் சுற்றி வந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த கடைகளைப் பார்வையிட்டதோடு, அங்குள்ள பொதுமக்களோடும் நஜிப் அளவளாவினார்.

பின்னர் பத்துமலையில் அமைந்திருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய அலுவலகத்திற்கு சென்ற நஜிப்பிற்கு மாலை அணிவித்து மரியாதைகள் செய்யப்பட்டன.

#TamilSchoolmychoice

அவரது வருகையைத் தொடர்ந்து பத்துமலை வளாகத்தில் அவர் இருக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதோடு, மக்களிடையே பேசப்படும் ஒரு விவாதமாகவும் அவரது வருகை உருமாறியது.

பிரதமராக இருந்த காலத்தில், 1எம்டிபி போன்ற விவகாரங்களில் எத்தனையோ சர்ச்சைகள், எதிர்ப்புகள் அவருக்கு இருந்தாலும், இந்தியர்களைப் பொறுத்தவரை அவர்களின் பிரச்சனைகளைக் கண்டறிந்து, அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுத்தார் என்பதில் பொதுவாக இந்தியர்களிடையே ஒருமித்த கருத்து நிலவுகிறது.

அதற்கேற்ப, தனக்கு எதிரான வழக்குகள் ஒருபுறம் தனக்கு நெருக்கடியைத் தந்தாலும், தொடர்ந்து அவர் மக்கள் மன்றங்களில் துணிச்சலுடன் கலந்து கொள்வதும், தனது கருத்துகளைப் பகிரங்கமாக வெளியிடுவதும், அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் பத்துமலை தைப்பூசத்தில் நஜிப் கலந்து கொண்டது இந்தியர்களுக்கு அவர் மீதான அபிமானத்தை அதிகரிக்கச் செய்துள்ளது என்றே கூறவேண்டும்.

இந்த முறை சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி ஆகியோர் பத்துமலை தைப்பூசத்திற்கு வருகை தந்தனர். ஆனால்  பிரதமர், (மகாதீர் வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கிறார்) துணைப் பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளாத பட்சத்தில் நஜிப்பின் தைப்பூச வருகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றே கூற வேண்டும்.

நஜிப்பின் பத்துமலை தைப்பூச வருகையின்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்: