புது டெல்லி: வருகிற மே மாதத்தில் இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் வேளையில், அகில இந்திய காங்கிரஸ் தலைமை உத்தர பிரதேச கிழக்குப் பகுதியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தியை நியமிப்பதாக நேற்று (புதன்கிழமை) அறிவித்தது.
சமீபக் காலமாக உடல்நலக் குறைவு காரணமாக, சோனியா கட்சியிலிருந்து விலகலாம் எனும் கருத்துகள் நிலவி வரும் வேளையில், பிரியங்காவின் இந்த திடீர் நியமனம், சோனியாவின் இடத்தை, பிரியங்கா நிரப்பலாம் என பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இது குறித்துப் பேசிய ராகுல், “பிரியங்கா காந்தி என்னுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவதில் எனக்கு மகிழ்ச்சி. அவர் கடினமாக உழைக்கக்கூடியவர், மிகுந்த திறமைக் கொண்டவர்” என புகழாரம் சூட்டினார். பிரியங்கா தேர்தலில் போட்டியிடுவது அவரின் விருப்பம் எனவும் ராகுல் தெரிவித்தார்.
இச்சூழலில், பிரியங்காவின் அரசியல் வருகையை காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இச்சூழலில் காங்கிரஸ் கட்சி எடுத்த இந்த அதிரடி முடிவு பாஜகவுக்கு உத்திர பிரதேசத்தில் கடுமையான போட்டியை அளிப்பதற்காகவே என்ற கருத்தும் எழுந்துள்ளது.