Home நாடு கேமரன் மலை யாருக்கு? வாக்களிப்பு தொடங்கியது

கேமரன் மலை யாருக்கு? வாக்களிப்பு தொடங்கியது

1021
0
SHARE
Ad

தானா ராத்தா – மே 9 பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் மிக முக்கியமான இடைத் தேர்தலாகக் கருதப்படும் கேமரன் மலை இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 8.00 மணிக்கு சுறுசுறுப்பாகத் தொடங்கியது.

நாட்டின் எதிர்கால அரசியலின் திசையை கேமரன் மலை இடைத் தேர்தல் முடிவுகள் நிர்ணயிக்கும்.

பொதுத் தேர்தலில் தோல்வியுற்று ஆட்சியை இழந்த தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வர, தனது வழக்கமான இன ரீதியான அரசியலைக் கையிலெடுத்துள்ளது. ஒருபக்கம் மலாய் முஸ்லீம் கூட்டணி என்றும் பாஸ்-அம்னோ கூட்டணி என்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேசிய முன்னணி அதற்கேற்ப, கேமரன் மலையிலும் தனது வியூகத்தை வகுத்திருக்கிறது.

கேமரன் மலை பிரச்சாரத்தில் நஜிப்
#TamilSchoolmychoice

மஇகாவிடமிருந்து அந்தத் தொகுதியைப் பிடுங்கி, 22 விழுக்காடு பூர்வ குடி வாக்காளர்களைக் கருத்தில் கொண்டு ஒரு பூர்வ குடி வேட்பாளரைத் தேர்வு செய்துள்ளது.

இதன் காரணமாக, ஒருபக்கம் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டிருக்கும் பாஸ் அம்னோவுக்கு ஆதரவு தர, இன்னொரு பக்கம் பூர்வ குடி வேட்பாளர் என்பதால் பூர்வகுடி வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களிப்பர் என்ற வியூகம் வகுத்து களத்தில் இறங்கியிருக்கிறது தேசிய முன்னணி.

இந்த வியூகம் வெற்றி பெற்றால், தேசிய முன்னணி வேட்பாளர் கேமரன் மலையில் வெல்வார் என்பதோடு, தொடர்ந்து இதே போன்ற வியூகத் திட்டங்களை வகுத்து தேசிய முன்னணி தனது அரசியல் பாதையை முன்னெடுத்துச் செல்லும்.

நம்பிக்கைக் கூட்டணி நிலை என்ன?

தொடர்ந்து இனபேதமற்ற அடிப்படையில் தனது அரசியலை முன்னெடுக்க விரும்பும் நம்பிக்கைக் கூட்டணி, தனது சார்பில் ஜசெக வேட்பாளரை – ஓர் இந்தியரை மீண்டும் நிறுத்தியுள்ளது.

மஇகாவிடமிருந்து கேமரன் மலை அம்னோவால் பிடுங்கப்பட்ட விவகாரம் இந்தியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதால், இந்திய வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக ஜசெகவின் எம்.மனோகரனுக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் 30 விழுக்காடு சீன வாக்காளர்களும் நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, சுமார் 40 விழுக்காடு சீன-இந்திய வாக்குகளை நம்பிக்கைக் கூட்டணி சுளையாகப் பெறும் என அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.

மேலும் ஒரு பத்து அல்லது பதினைந்து விழுக்காடு வாக்குகள் மலாய்க்காரர்கள், பூர்வ குடியினர் ஆகியோரிடமிருந்து, பெர்சாத்து, பிகேஆர், அமானா ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பெற முடியுமா என்பதுதான் நடப்பிலிருக்கும் சவால். அதனை இந்தக் கட்சிகள் சாதித்துவிட்டால், மனோகரன் இங்கு வெல்வது உறுதி.

கேமரன் மலை பிரச்சாரத்தில் மகாதீர்

இதன் காரணமாகவே, வழக்கத்திற்கு மாறாக பிரதமர் துன் மகாதீரையே பிரச்சாரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நம்பிக்கைக் கூட்டணி கேமரன் மலையில் நேரடியாக இறக்கியுள்ளது.

அதே சமயம், இன அரசியலின் தாக்கத்தினால், அம்னோ-பாஸ் வாக்குகள் மீண்டும் அம்னோ-தேசிய முன்னணிக்கே திரும்புமானால் – பூர்வ குடி மக்களும் எங்களில் ஒருவன் என தேசிய முன்னணி வேட்பாளர் ரம்லி முகமட் நூருக்கு வாக்களிப்பார்களேயானால், கேமரன் மலை மீண்டும் தேசிய முன்னணியின் கைவசமாகும்.

மலேசிய அரசியலும் சற்றே மாறத் தொடங்கும்.

ஆனால், பூர்வ குடி மக்களின் 50 விழுக்காடு வாக்குகளைத் தக்க வைத்துக் கொண்டாலே நம்பிக்கைக் கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் மேலும் பிரகாசமாகி விடும்.

வெற்றிக் கனியைப் பறிக்கப் போவது யார்?

கேமரன் மலையில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் யார்?

இதற்கான விடைகள் நமக்கு இன்றிரவு கிடைக்கும்போது, மலேசிய அரசியல் பாதையை தேசிய முன்னணி – நம்பிக்கைக் கூட்டணி என இரு அணிகளும் எதிர்காலத்தில் எவ்வாறு வகுக்கப் போகின்றன என்ற தெளிவும் நமக்கு ஓரளவுக்குக் கிடைக்கும்!

-இரா.முத்தரசன்