கோலாலம்பூர்: அடுத்த மாதம் தொடக்கத்தில் கொண்டாடப்பட இருக்கும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு, 7,500 கிலோகிராமிற்கும் மேற்பட்ட கனரக வாகனங்களுக்கு சாலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தது.
வருகிற பிப்ரவரி 2, 3, 4, 9, மற்றும் 10-ஆம் தேதிகளில் இத்தடை விதிக்கப்படும் என அது குறிப்பிட்டது.
சிமட்டி, இரும்பு, சரளை, மணல் போன்ற சரக்குகளை எந்திச் செல்லும் கனரக வாகனங்களும், பாரந்தூக்கி (கிரேன்), இடிப்புந்து (புல்டோசர்கள்) மற்றும் நீராவி உருளை (ஸ்டீம் ரோலர்ஸ்) உள்ளிட்ட வாகனங்களுக்கும் இத்தடையானது விதிக்கப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில், நள்ளிரவு தொடங்கி அதிகாலை 6 மணி வரையிலும், இரண்டாவது வகை கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, மின் அல்லது மின்னணு மற்றும் தொழிற்சாலைப் பொருட்களை ஏந்திச் செல்லும் கொள்கலன்கள் மற்றும் லாரிகளுக்கு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மூன்றாவது வகை கனரக வாகனங்களான, சிமிட்டி கலவை வண்டி, மற்றும் மொபைல் பாரந்தூக்கிகள் 25 கிலோமீட்டருக்கு அப்பாற்பட்ட தொலைவுப் பயணத்தை மேற்கொள்ள தடை செய்யப்பட்டுள்ளது.