எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான கௌரி லங்கேஷ் கொலை வழக்கில், வலது சாரிகளுக்கு முக்கியத் தொடர்பிருப்பதாக தைரியமாக குற்றச்சாட்டை முன்வைத்தவர் பிரகாஷ்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாஜகவுக்கு எதிரான விமர்சனங்களையும் அவர் முன் வைத்து வருகிறார்.
கடந்த ஜனவரி 1-ஆம் தேதி பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். டுவிட்டரில், தனது தேர்தல் பிரச்சாரங்கள் குறித்து #citizensvoice in parliament என்ற ஹேஷ்டேக் மூலமாக தனது கருத்துகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.
சில அரசியல் கட்சிகள் தொகுதி மக்களை சந்திக்க விடாமல் , தன்னைத் தடுப்பதாக பிரகாஷ் ராஜ் கூறினார். குறிப்பாக, சாந்தினி நகரில் பிரச்சாரத்தைத் தொடங்கிய சிறிது நேரத்தில் சில அரசியல் கட்சிகள் அவரைப் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுத்தனர் என அவர் கூறினார்.
இது தொடர்பாக காவல் துறை ஆணையரிடம் பேசி தீர்வு கண்டுள்ளதாக பிரகாஷ் ராஜ் தெரிவித்தார். இவ்வாறு செய்வதன் மூலம் தங்களை யாரும் தடுத்து, நிறுத்தி விட முடியாது எனவும், இனி மேலும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் பிரகாஷ் ராஜ் கூறினார்.