கோலாலம்பூர்: மக்களின் நலன், நாட்டின் பொருளாதாரம், நிதி விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து, நடவடிக்கை எடுக்கும் பொருளாதார நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தது. இக்குழுவிற்கு பிரதமர் துன் மகாதீர் முகமட் தலைமை ஏற்பார்.
நிலையான பொருளாதார வளர்ச்சி, செல்வத்தை சமமாக விநியோகித்தல் மற்றும் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துதல் போன்ற விவகாரங்களில் இக்குழு அதன் பங்கினை வகிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களுடைய பிரச்சனைகளை செவிமடுத்தும், அவற்றிற்கு தீர்வுக் காண்பதற்கும், குறிப்பாக அவர்களுடைய பொருளாதார விவகாரத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை கண்டறிந்து செயல்படுவதற்கு இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்களின் வாழ்க்கை செலவினங்கள், வேலைவாய்ப்பு, வறுமை மற்றும் வீட்டு உரிமம் போன்ற பிரச்சனைகளும் கருத்தில் கொள்ளப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.