Home English News பிஎஸ்எம் கட்சி செமினியில் எந்தக் கூட்டணியின் வாக்குகளைப் பிரிக்கும்?

பிஎஸ்எம் கட்சி செமினியில் எந்தக் கூட்டணியின் வாக்குகளைப் பிரிக்கும்?

832
0
SHARE
Ad

செமினி – எதிர்வரும் மார்ச் 2-ஆம் தேதி நடைபெறவிருக்கும் செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் பிஎஸ்எம் எனப்படும் பார்ட்டி சோஷிலிஸ்ட் மலேசியா கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.

பிஎஸ்எம் கட்சியின் இளைஞர் பகுதி செயற்குழு உறுப்பினர் நிக் அசிஸ் அபிக் அப்துல் என்ற 25 வயது இளைஞர் அந்தக் கட்சியின் செமினி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார். பிஎஸ்எம் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் எஸ்.அருட்செல்வன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த 14-வது பொதுத் தேர்தலில் செமினியில் பிஎஸ்எம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அருட்செல்வன் இந்த முறை போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார். மலாய் வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட செமினி தொகுதியில் பிரச்சாரங்கள் அனைத்தும் மலாய்-முஸ்லீம் வாக்காளர்களைக் கவர்வதன் அடிப்படையிலேயே அமைந்திருக்கும் என்பதால் அருட்செல்வன் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டதாகக் கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்த முறை மலாய்-முஸ்லீம் வேட்பாளரைக் களமிறக்குவதன் மூலம் கணிசமான வாக்குகளைப் பெறுவதற்கு பிஎஸ்எம் மும்முரமாகப் பாடுபடும். கடந்த முறை இங்கு போட்டியிட்ட அருட்செல்வன் 1,293 வாக்குகளைப் பெற்றார். நீண்ட காலமாக இந்த வட்டாரத்தில் நன்கு அறிமுகமானவர் – கள செயற்பாட்டாளராகப் பாடுபட்டவர் என்ற காரணத்தால் அருட்செல்வன் 14-வது பொதுத் தேர்தலில் இந்திய வாக்குகளைப் பெற்றிருப்பார் என கணிக்கப்படுகிறது.

ஆனால் இந்த முறை பிஎஸ்எம் கட்சியின் வியூகம் மாறுபட்டிருக்கிறது. அக்கட்சியின் சார்பில் போட்டியிடப் போகும் நிக் அசிஸ் மலாய்-முஸ்லீம் வேட்பாளர் என்பதால் அவர் எத்தனை வாக்குகளைப் பெறுவார் என்பதும் அவ்வாறு பெறும் வாக்குகளால் தேசிய முன்னணி கூட்டணிக்குப் பாதிப்பு ஏற்படுமா அல்லது நம்பிக்கைக் கூட்டணிக்குப் பாதிப்பு ஏற்படுமா என்பது மிகவும் எதிர்பார்க்கப்படும் சுவாரசியமாக கேள்வியாக இருக்கப் போகிறது.

14-வது பொதுத் தேர்தலில் பிஎஸ்எம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எஸ்.அருட்செல்வன்

கேமரன் மலை வெற்றியைத் தொடர்ந்து உற்சாகக் களிப்பில் இருக்கும் அம்னோ-தேசிய முன்னணி கட்சியினர் அதே போன்றதொரு வெற்றியை செமினியிலும் பதிவு செய்தால் அதைத் தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணியிலும் சலசலப்பும் பிளவுகளும் ஏற்படக் கூடிய வாய்ப்புகளும் அதிகம்.

அதே வேளையில், தங்களின் கோட்டையான சிலாங்கூரில் அமைந்திருக்கும் செமினியில் மீண்டும் வெற்றி பெற்றுவிட்டால், நம்பிக்கைக் கூட்டணியின் கை ஓங்கிவிடும் என்பதோடு, கேமரன் மலையில் தேசிய முன்னணி பெற்ற வெற்றி தனிப்பட்ட முறையில் பார்க்க வேண்டிய ஓர் எதிர்பாராத வெற்றி என்பதாகப் பொருள் கொள்ளப்படும்.

செமினி வாக்காளர்களில் 45 விழுக்காட்டினர் 40 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதால் தங்களின் இளமையான பிஎஸ்எம் வேட்பாளர் பொருத்தமான தேர்வு என அருட்செல்வன் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஜனவரி 11-ஆம் தேதி செமினி சட்டமன்ற உறுப்பினர் பக்தியார் முகமட் நூர் (57 வயது) மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

எதிர்வரும் சனிக்கிழமை, பிப்ரவரி 16-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கான நாளாகும்.

பிஎஸ்எம்  கட்சி செமினியில் வெல்லப் போவதில்லை என்பது தெளிவு. ஆனால், இந்த இடைத் தேர்தலில் எத்தனை வாக்குகளை அள்ளப் போகிறது – எந்தத் தரப்பு வாக்குகளை பிரிக்கப் போகிறது – அவ்வாறு பிரிப்பதால் தேசிய முன்னணிக்கோ, நம்பிக்கைக் கூட்டணிக்கோ பாதிப்பு ஏற்படுமா? என்பது போன்ற கேள்விகளை பிஎஸ்எம் கட்சியின் போட்டி எழுப்பியுள்ளது.

-இரா.முத்தரசன்