சென்னை: இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற மே மாதம் நடைபெற இருக்கும் வேளையில், தாம் அத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அதிகாரப்பூர்வமாக நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றின் வாயிலாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.
ஆயினும், தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமது கட்சி போட்டியிடும் என அவர் தெரிவித்தார். அதே சமயத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கும் எந்தவொரு கட்சிக்கும் தாம் ஆதரவாக இருக்கப்போவதில்லை என ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி இரசிகர் மன்றத்தின் பெயரில், தமது பெயரையோ, படத்தையோ எந்த ஒரு கட்சியும் தங்களின் பிரச்சாரத்திற்காக பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது என அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் முக்கியப் பிரச்சனையாக அமைகிற தண்ணீர் பிரச்சனையை எவரால் தீர்த்து வைக்க இயலும் என மக்கள் நம்புகிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்குமாறு தனது அந்த அறிக்கையில் அவர் பதிவிட்டுள்ளார்.