ஜம்மு காஷ்மீர்: காஷ்மீர் பிரச்சனையை அரசியல் ரீதியாக தீர்க்காவிட்டால், புல்வாமா போன்ற கொடுரத் தாக்குதல்கள் தொடரும் என தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பாருக் அப்துல்லா தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎப் படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூரத் தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டம் தீவிரமானது. இதனையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்குப் பின்பு, காஷ்மீரில் மாணவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மீது ஒரு சில இந்து ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து கவலை தெரிவித்த பாருக் அப்துல்லா, புல்வாமா தாக்குதலில் காஷ்மீர் மக்களின் பங்கு எதுவும் இல்லை எனத் தெரிவித்தார்.
அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு விவகாரத்தை சம்பந்தப்பட்டவர்களோடு தீர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்துவது எந்த விதத்திலும் நியாயமில்லை என அவர் தெரிவித்தார்.