Home நாடு மேலும் 3 நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள் நடைபெறக் கூடிய சாத்தியம்

மேலும் 3 நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள் நடைபெறக் கூடிய சாத்தியம்

1174
0
SHARE
Ad
புத்ரா ஜெயாவில் அமைந்திருக்கும் கூட்டரசு நீதிமன்றம் (கோப்புப் படம்)

புத்ரா ஜெயா – மலேசிய அரசியலின் வெப்பம் எப்போதும் இல்லாத அளவுக்கு எகிறிக் கொண்டிருக்கும் சூழலில் ஒருபுறம் செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரங்கள் களை கட்டிக் கொண்டிருக்க, அடுத்து வரும் மாதங்களில் மேலும் 3 இடைத் தேர்தல்கள் நடைபெறக் கூடிய நிலைமையை நேற்றைய நீதித் துறை தீர்ப்புகள் உருவாக்கியிருக்கின்றன.

சபா மாநிலத்தின் கிமானிஸ், சிபித்தாங், ஜாசின் ஆகிய மூன்று தொகுதிகளின் 14-வது பொதுத் தேர்தல்கள் வெற்றிகள் செல்லாது என தொடுக்கப்பட்ட வழக்குகளில், அந்த வழக்குகளை மீண்டும் தேர்தல் நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென கூட்டரசு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த பின்னர் தேர்தல் நீதிமன்றம் மறு தேர்தல் நடத்த உத்தரவிட்டால், இந்த 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெறக் கூடிய சாத்தியங்கள் நிலவுகின்றன.

#TamilSchoolmychoice

அதே வேளையில் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ரந்தாவ் சட்டமன்றத் தொகுதிக்கும் விரைவில் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

கிமானிஸ் நாடாளுமன்றம் (சபா)

கிமானிஸ், முன்னாள் வெளியுறவு அமைச்சரும், முன்னாள் சபா அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அனிபா அமான் போட்டியிட்டு வென்ற தொகுதியாகும். 156 வாக்குகள் வித்தியாசத்தில் இந்தத் தொகுதியில் மும்முனைப் போட்டியில் அனிபா அமான் 11,942 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பார்ட்டி வாரிசான் கட்சியின் வேட்பாளர் கரிம் புஜாங் 11,786 வாக்குகளும், பார்ட்டி ஹரப்பான் வேட்பாளர் 1,300 வாக்குகளும் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து கரிம் புஜாங் அனிபாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடுத்தார். அந்த வழக்கைத் தேர்தல் நீதிமன்றம் விசாரிக்காமலேயே தள்ளுபடி செய்ய, கரிம் கூட்டரசு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்தார்.

நேற்று கூடிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தேர்தல் நீதிமன்றம் அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டது.

சிபித்தாங் நாடாளுமன்றம் (சபா)

இதற்கிடையில் நேற்று திங்கட்கிழமை கூடிய மற்றொரு கூட்டரசு நீதிமன்ற அமர்வு சபா மாநிலத்தின் சிபித்தாங் நாடாளுமன்றத் தொகுதிக்கான மறு தேர்தல் கோரும் விண்ணப்பத்தை மீண்டும் விசாரிக்கும்படி தேர்தல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இந்தத் தேர்தலில் யமானி ஹபிஸ் பெற்ற வெற்றி செல்லாது என அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நூர் ஹயாத்தி தொடுத்திருந்த வழக்கை தேர்தல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த முடிவை எதிர்த்து நூர் ஹயாத்தி மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மேல்முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் நேற்று அனுமதித்து, வழக்கை மீண்டும் விசாரிக்க தேர்தல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

சிபித்தாங் தொகுதியில் வெற்றி பெற்ற யமானி முன்னாள் சபா முதலமைச்சர் மூசா அமானின் மகனாவார். இந்தத் தொகுதியில் அவர் 852 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஜாசின் நாடாளுமன்றம் (மலாக்கா)

துன் மகாதீருக்கு நெருக்கமான அரசியல் ஆதரவாளரான டத்தோஸ்ரீ கைருடின் அபு ஹசான் போட்டியிட்ட ஜாசின் நாடாளுமன்றத் தொகுதியிலும் மீண்டும் மறுதேர்தல் நடக்கும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்தத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோஸ்ரீ அகமட் ஹம்சாவின் வெற்றியை எதிர்த்து கைருடின் அபு ஹசான் தொடுத்திருந்த வழக்கையும் தேர்தல் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக கூட்டரசு நீதிமன்றத்தில் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டை செவிமடுத்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த வழக்கை தேர்தல் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டுமென தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கில் கைருடினுக்கு ஆதரவாக வழக்கறிஞர் டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம் வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாசின் நாடாளுமன்றத் தொகுதியில் 219 வாக்குகள் வித்தியாசத்தில் கைருடின் தோல்வியடைந்தார்.

ஆக, இந்த மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மறுதேர்தல் நடைபெற தேர்தல் நீதிமன்றம் தீர்ப்பளித்தால், இப்போது செமினி, அடுத்து ரந்தாவ், அதற்கடுத்து இன்னும் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகள் என ஒரே இடைத் தேர்தல் பரபரப்பும் விறுவிறுப்பும் நாட்டை ஆக்கிரமிக்கும் சூழ்நிலை ஏற்படும்.

-இரா.முத்தரசன்