அமெரிக்கா: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில், ஜய்ஷ் இ முகமட் தீவிரவாதக் கும்பல் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் இந்திய துணை இராணுவப்படையினர் 44 பேர் கொல்லப்பட்டது கோரமான சம்பவம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அமெரிக்கா கூடிய விரைவில் முறையான அறிக்கை ஒன்றை வெளியிடும் என அவர் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், இந்தியாவும், பாகிஸ்தானும் புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் இணைந்து விசாரணையை மேற்கொண்டால் நல்லதொரு முடிவினைக் காணலாம் என டிரம்ப் கூறினார்.
இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அரசு, இந்திய அரசோடு நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறது எனவும், இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மட்டும் கூறாமல், இந்தியாவுக்கு தேவையான ஆதரவையும் அளிப்போம் என அவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும், அதற்கான விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பை பாகிஸ்தான் வழங்க வேண்டும் எனவும் டிரம்ப் வலியுறுத்தினார்.