Home நாடு அனைத்துலகத் தாய்மொழி தினம்: “விழித்துக் கொள்வோம் தமிழ்மொழிக்காக…”

அனைத்துலகத் தாய்மொழி தினம்: “விழித்துக் கொள்வோம் தமிழ்மொழிக்காக…”

3512
0
SHARE
Ad

(இன்று பிப்ரவரி 21-ஆம் தேதி வியாழக்கிழமை அனைத்துலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, கோல லங்காட், தேசிய வகை தெலுக் பங்ளிமா காராங் தமிழ்ப்பள்ளியின் இணைப்பாடத் துணைத் தலைமையாசிரியர் வாசு சுப்பிரமணியம் வரைந்த இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது)

2000-தாம் ஆண்டு முதல் இன்று வரை ஒவ்வோர் ஆண்டும் பிப்பரவரி 21-ஆம் நாள் அன்று ‘அனைத்துலகத் தாய்மொழி தினமாக’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதே நாளில் 1952-யில் கிழக்குப் பாக்கிஸ்தானில் (இன்று வங்காளதேசம் என்று அழைக்கப்படுகிறது) வங்காள மொழியை தேசிய மொழியாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த டாக்கா ஜகன்நாத் பல்கலைக்கழக மாணவர்களையும், டாக்கா மருத்துவக் கல்லூரி மாணவர்களையும் நினைவு கூறும் நாளே இந்த அனைத்துலக தாய்மொழி தினமாகும்.

தன் தாய்மொழியைக் காப்பதற்காக உயிர் தியாகம் செய்த அந்த மாணவர்களின் ஆத்மாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து விடுவோம். அதே நேரத்தில், நம் தாய் மொழியான தமிழைக் காப்பதற்கு சபதம் எடுக்கும் நேரம் இது என்பதையும் மறந்துவிட வேண்டாம்.

கட்டுரையாளர்: வாசு சுப்பிரமணியம்
#TamilSchoolmychoice

தமிழ் மொழிக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனால், தமிழனுக்கு நிச்சயம் ஓர் அடையாளம் தேவை. அந்த அடையாளம் தான் நம் தாய்மொழியான தமிழ் மொழி. மொழி ஓர் இனத்தின் விழி என்பார்கள். விழியைக் காத்திட மொழி விழிப்புணர்வு ஏற்படுதல் வேண்டும். செம்மொழிக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்வதை விட, இம்மொழி எனக்கு உயிர் என்று சொல்லிப் பழகுவோம். ‘யாமறிந்தமொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’என்று வீர முழக்கம் செய்த பாரதியாரின் வார்த்தைகள் உயிர் பெற்றவை. அப்படியொரு மொழிக்குச் சொந்தக்காரர்கள் நாம். அப்படியாயின்,‘சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்’ என்கிற வரிகளைப் பொன்னெழுத்துக்களால் பொறித்துக் கொள்வோம்.

2008-ஆம் ஆண்டில் ஜனவரி 21-ஆம் திகதி அன்று உலகத்தில் ஒரு பழமையான மொழி அழிந்து விட்டதை நீங்கள் அறிவீர்களா? ஆம், அன்று தான் ‘ஏயாக்’ என்ற மொழியைப் பேசும் ஒரே பெண்மணியான மேரி ஸ்மித் ஜோன் தன் இறுதி மூச்சை இறையாக்கினார். அவர் இறையாக்கியது மூச்சை மட்டும் அல்ல, அதோடு சேர்த்து ‘ஏயாக்’ என்ற மொழியையும் தான். அவருடைய வாரிசுகள் யாரும் தம் தாய்மொழியைக் கற்றுக் கொள்ள வில்லை என்பதே வேதனையான செய்தியாகும்.

இந்தச் செய்திக்கும் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு 50% மட்டுமேஅனுப்புகின்றனர் என்ற செய்திக்கும் நெடுந்தூரமில்லை. சிந்தித்துப் பார்க்க வேண்டியத் தருணம் இது. ‘நெஞ்சில்உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனைச் சொல்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி கிளியே’ என்று அன்றே சாட்டையடிக் கொடுத்திருக்கிறார் பாரதியார். நான் தமிழை வாழ வைக்கிறேன் என்று சொல்வதைவிட, நான் தமிழோடு வாழ்கிறேன் என்று சொல்லிப் பாருங்கள்.‘உலகம் முழுதும் தமிழ் பரவிக்கிடக்கிறது. ஆனால், மலேசியாவில் மட்டும் தான் தமிழ் வாழ்கிறது’ என்று அறிஞர் அண்ணா கூறியிருப்பது வெறும் புகழ்ச்சி அல்ல, உண்மையும் அதுவே!

எவ்வளவுப் பெரிய நம்பிக்கையான சொல் அது. காரணம், தமிழ்நாடு பல தமிழ் அறிஞர்களையும், ஆன்மீக குருக்களையும், தமிழ் வரலாற்றினையும் கொண்டிருக்கலாம், ஆனால், தமிழை வாழ வைத்துக் கொண்டிருப்பது நாம் தான் என்று இந்த தமிழ்கூறு நல்லுலகத்திற்கு எடுத்துக் கூறுவோம். மலேசியத் திருநாட்டிலே நாம் பிறந்ததற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதிலும், தமிழ் மொழியோடு நாம் வாழ்வதற்கு இம்மண்ணிற்கு நாம் நன்றிக் கடன் பட்டிருக்கின்றோம். உலகத்தில் தாய் மொழிக் கற்றலுக்காக அதிகமான வசதிகளையும், வாய்ப்புகளையும், கூடுதல் மானியங்களையும் தருவது மலேசியாவில் மட்டுமே. நாம் அனைவரும் மலேசிய அரசாங்கத்திற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

நாட்டின் 524-ஆவது பள்ளிக்கு கோ.சாரங்கபாணி என்று பெயர் வைக்கப்படுவது மலேசியாவில் மட்டுமே. தாய்மொழி தினம் என்பது நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று அல்ல, நிஜத்தில் வாழ வைக்க வேண்டிய ஒன்று. நமக்குள் பழங்கதைகளைப் பேசுவதை நிறுத்தி விட்டு, புதிய இலட்சியக் கனவுகளைப் பயிர் செய்வோம். காரணம், ‘தமிழின் பெருமை தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில் இருக்கிறது’.

தமிழ்ப்பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பாததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவதற்கு ஒரே காரணம் தான் இருக்கிறது. அது, தமிழ் நம் தாய்மொழி. அன்று டாக்காவில் நடந்த அந்த பட்டதாரி இளைஞர்களின் உயிர் தியாகத்தைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அந்த நிலைமை நிச்சயம் நமக்கு வாராது. ஆனால், அதற்கு நாமே காரணமாகி விடக்கூடாது.

இவ்வாண்டு உலகத் தாய்மொழி தினத்தை மையமாகக் கொண்டு தமிழ்ப்பள்ளிகள் தோறும் ஓர் விழாவாகக் கொண்டாட வேண்டும். மாணவர்கள் மனதிலே தாய்மொழியின் முக்கியத்துவத்தை விதைக்க வேண்டும். நாட்டில் இருக்கும் அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து இந்த உலகத் தாய்மொழி தினத்தைக் கொண்டாடி அதன் மூலம் மொழி விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம். செம்மொழிக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்வதை விட, எங்கள் மொழியும் தரணி ஆளும் என்று சொல்லிக் கொள்வதிலே தான் பெருமை இருக்கிறது.

தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ்ப்பள்ளியின் உயர்ச்சிக்காகவும், தமிழ்க்கல்வியின் மலர்ச்சிக்காகவும் வாழ்ந்த அல்லது வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவன்களுக்கு இக்கட்டுரையை மனதாரச் சமர்ப்பணம் செய்கின்றேன். அனைவருக்கும் உலகத் தாய்மொழி தின வாழ்த்துகள்.

ஆக்கம்:-
திரு.வாசு சுப்பிரமணியம்
இணைப்பாடத் துணைத்தலைமையாசிரியர்
தேசிய வகை தெலுக் பங்ளிமா காராங் தமிழ்ப்பள்ளி
கோல லங்காட்
tenmaty@yahoo.com.my